கர்நாடகத்தில் முழு அடைப்பு எதிரொலி பெங்களூர் செல்லும் 2 விமானங்கள் ரத்து

சென்னை: பயணிகள் பற்றாக்குறையால், சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் இருந்து, பெங்களூர் செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. எனவே நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

நேற்று காலை 11:35 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தில் புறப்பட்டு, பகல் 12:35 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3:10 மணிக்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த குறைந்த அளவு பயணிகளின் டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டாலும், சென்னை-பெங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் மற்ற 16 விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related posts

தூத்துக்குடி அருகே மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடையடைத்து உண்ணாவிரதப் போராட்டம்

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி