பெங்களூர் ஸ்டைல் பில்டர் காஃபி!

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து வலது புறமாக ஐம்பது மீட்டர் கால்நடையாக பயணித்தால் காஃபி டவுன் என்கிற ஒரு மினி கஃபேவைஅடையலாம். இந்த கஃபேயின் சிறப்பு என்னவென்றால் அங்கு கிடைக்கிற மணம் கமழும் காஃபிதான். அந்த கஃபேயில் கிடைக்கும் காஃபி பெங்களூர் ஸ்டைல் பில்டர் காஃபி என்பது கூடுதல் ஸ்பெஷல். கர்நாடகாவின் கூர்க் பகுதியில் சொந்தமாக காஃபிக் கொட்டைகளை விளைவித்து, அதை காஃபி பவுடராக தயார் செய்பவர் ராம்ராஜ். பெங்களூரில் பல கஃபேக்களில் இவரது காஃபிதான் ஃபேமஸ். பெங்களூரில் பல இடங்களில் கிடைக்கும் இந்த காஃபியை சென்னை மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்து சொந்தமாக இந்த கஃபேவைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். உங்க காஃபி சீக்ரட்டை பற்றிச் சொல்லுங்களேன் என்றதும் சிரித்தபடி பேசத் தொடங்கினார் ராம்ராஜ்.“நான் ஒரு காஃபி லவ்வர்.

நல்ல காஃபி எங்கு கிடைச்சாலும் தேடிப்போய் குடிப்பேன். பெங்களூரில் பல இடங்களில் நல்ல காஃபி கிடைக்கும். ஆனால், சென்னையில் ஒருசில இடங்களில்தான் குடிக்கும்படியான நல்ல காஃபி கிடைக்கிறது. சொந்தமாக காஃபி விளைவிப்பதால் நாமே ஒரு காஃபி கஃபே ஸ்டார்ட் பண்ணலாமே என்று யோசித்துதான் இந்த கஃபேயைத் தொடங்கினேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார். “இது முழுக்க முழுக்க பெங்களூர் ஸ்டைல் காஃபிதான். சுவையிலும் மணத்திலும் முழுவதுமாக வேறுபட்டு இருப்பதால் இந்த காஃபியைக் குடிப்பதற்கு நிறையபேர் வருகிறார்கள். சிலர் காஃபியை குடித்துவிட்டு நல்லா இருக்கே என்றபடி காஃபிப் பொடியையும் வாங்கிச் சென்று வீட்டில் தயாரித்து குடும்பத்தோடு குடிக்கிறார்கள். இந்தக் காஃபியைப் போலவே பெங்களூரில் இன்னும் பல டிஷ் பிரபலம். அதையும், சென்னைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கு சென்னையில் பன் பட்டர் ஜாம் எப்படி ஃபேமஸோ, அதேபோல பெங்களூரில் காங்கிரஸ்ன்னு சொல்லக்கூடிய மசாலா பீனட் ரொம்ப ஃபேமஸ்.

அங்கு கிடைக்கக்கூடிய அந்த காங்கிரஸ் மசாலா கடலை பெங்களூரின் எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். அந்தக் கடலையை வைத்து பல டிஷ்களை அங்கு தயாரிப்பார்கள். அதேபோல, பெங்களூரில் கார பன் ரொம்ப ஃபேமஸ். அங்கு கிடைக்கும் மசாலா, நட்ஸ், மாவு, தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் அந்த ‘கார பன்’ மற்றும் காங்கிரஸ் மசாலா பீனட் என இரண்டையும் சேர்த்து காங்கிரஸ் பன் என ஒரு புதுவகையான பன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இப்போது நமது கஃபேயில் காஃபிக்கு அடுத்தபடியாக இந்த காங்கிரஸ் பன் ரொம்ப ஃபேமஸ். அதேபோல, பன் பட்டர் குல்கந்து நமது கஃபேயில் நன்றாக இருக்கும். ஏனெனில், இந்த குல்கந்து பெங்களூரில் இருந்து வருகிறது. அங்கு தயாராகி வருகிற குல்கந்தை வைத்து பன் பட்டர் குல்கந்து என ஒரு டிஷ் தயாரித்துக் கொடுக்கிறோம். அதேபோல, பட்டர் குல்கந்து பனானா என ஒரு பெங்களூர் டிஷ் கொடுத்து வருகிறோம். அதாவது, குல்கந்துவுடன் வாழைப்பழத்தை சிப்ஸ் மாதிரி வெட்டி சேர்த்துக் கொடுப்போம். பெங்களூரில் பல இடங்களில் இது ஃபேமஸ். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் குல்கந்து மற்றும் வாழைப் பழத்தைச் சேர்த்து சாப்பிடும்போது சுவை அள்ளும்.

அதேபோல பெங்களூர் ஸ்பெஷல் மஸ்கா பன் இங்கு கிடைக்கும். தில்பசந்த் என்கிற பெங்களூர் ஸ்டைல் ஸ்னாக்சும் இங்கு கிடைக்கிறது. இதுபோக காலை, மாலை என இரு வேளைகளிலும் டிஃபன் கொடுத்து வருகிறோம். பெங்களூர் ஸ்டைல் தட்டு இட்லி அதோடு சட்னி. பொடி இட்லி, நெய் தட்டு இட்லி, மினி இட்லி கொடுத்து வருகிறோம். கூடவே குழி பணியாரமும் இருக்கிறது. காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகையிலும் பணியாரங்கள் இருக்கு. நூடுல்ஸ், மேகி மற்றும் சாண்ட்வெஜும் இருக்கிறது. பெரும்பாலும் நமது கஃபேயில் இருக்கிற பன் மற்றும் டிஷ் என எல்லாமே பெங்களூரில் இருந்துதான் வருகிறது. அங்கு தயாரிக்கப்படுவதால்தான் அதன் சுவை அப்படியே இருக்கிறது. பெங்களூரில் கிடைக்கக்கூடிய பல வகையான டிஷ்களை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கஃபேயை தொடங்கி இருக்கிறேன். என்னைப்போன்ற காஃபி பிரியர்களுக்கும், பெங்களூர் ஃபுட்ஸ் விரும்பிகளுக்கும் இந்த காஃபி டவுன் நல்ல சாய்ஸ். நிறையபேர் நண்பர்களோடு வந்து அனைத்தையும் சாப்பிட்டுப் பார்க்கிறார்கள். வீட்டிற்கு வாங்கியும் செல்கிறார்கள். சென்னையில் இருந்து பெங்களூர் சென்று சாப்பிடும் பலருக்கும் இந்த கஃபே நல்ல சாய்ஸ்’’ என மகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.

– ச.விவேக்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது