வாரி வழங்கும் வாழை இலை!

தமிழர்களுக்கு மிகப் பிடித்த வார்த்தைகளில் ஒன்று விருந்து. மழை என்று சொல்லும்போது எப்படி ஓர் ஈர உணர்வைப் பெறுகிறோமோ, அதேபோல விருந்து என்ற வார்த்தையைக் கேட்டதும் பல்வேறு பதார்த்தங்களின் சுவை நம் தொண்டையை நனைத்துச் செல்லும். அத்தகைய விருந்தில் பல அதிமுக்கிய பதார்த்தங்களை வைத்துப் பரிமாறினாலும், வாழை இலை இல்லையென்றால் அந்த விருந்து சிறக்காது. தையல் இலை, தாமரை இலை என முன்பு நாம் பார்த்திருப்போம். இன்று அவை மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டன. இப்போது பல புதிய இலைகள் வந்துவிட்டன. ஆனால் இவை யாவும் வாழை இலைக்கு ஈடாகாது. அதுவும் தலை வாழை இலை இருந்தால் அந்த விருந்து ராஜ விருந்துதான். தண்ணீர் தெளித்து, இனிப்பு, ஊறுகாய், பொரியல், அப்பளம், வடை, பொன்னி அரிசிச் சோறு என ஒவ்வொன்றாக பரிமாறும்போது வாழை இலையின் மணம் ஒவ்வொரு பதார்த்தத்திலும் பக்குவமாய் வீசும்…வாழை இலையின் மகத்துவம் குறித்து இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். விருந்து இலை வியாபாரத்திற்காகவே வாழையைச் சாகுபடி செய்து வரும் சிவகங்கை மாவட்டம் செராவயல் கீழையப்பட்டியைச் சேர்ந்த ராமநாதனைச் சந்தித்தோம். மருது சகோதரர்களின் நினைவிடம் அமைந்துள்ள திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நாச்சியார்புரம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் பிரதான சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது ராமநாதனின் இலை வாழைத்தோட்டம். உள்ளே நுழைந்தால் பசுமைப்பந்தல் போட்டது போல் நீண்டு கிடக்கிறது அந்த வாழைத்தோட்டம். முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களையே பயன்படுத்துவதால் மரங்கள் செழித்து வளர்வதோடு, இலைகளும் நல்ல நிறத்தில் இருக்கின்றன. தோட்டத்தில் ஆங்காங்கு இருக்கும் காய்ந்த சருகுகளை அகற்றும் பணியும், மரங்களுக்கு இயற்கை உரம் இடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அப்பணிகளைக் கவனித்துக் கொண்டே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார் ராமநாதன்.

“இங்குள்ள 16 ஏக்கரில் 12 ஏக்கரில் இலைக்காக வாழையைச் சாகுபடி செய்திருக்கிறேன். இதில் 500 தென்னைகளும் இருக்கின்றன. வாழை இலை விவசாயத்தை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதற்கு முன்பு நெல், கடலை, சோளம், வெண்டை போன்ற பயிர்களைச் சாகுபடி செய்தேன். ஒரு நாளைக்கு 200 கிலோ வெண்டைக்காயை அறுவடை செய்வோம். அந்தளவுக்கு சிறப்பான முறையில் பராமரிப்பு செய்து மகசூல் எடுப்பேன். விவசாய வேலைக்கான தொழிலாளர் பற்றாக்குறை, மான், மயில், குரங்கு போன்ற விலங்குகளின் தொந்தரவால் மாற்றுப் பயிருக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் மான் போன்ற விலங்குகள் சர்வசாதாரணமாக வந்துபோகும். இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. மாற்றுப்பயிராக எதைச் செய்யலாம் என யோசித்தபோது, வாழை சாகுபடி செய்யலாம் என்ற யோசனை வந்தது. இந்தப்பகுதிகளில் ஏதாவது விசேஷம் நடந்தால் இலை, வாழை மரம் போன்றவற்றுக்கு வேறு இடங்களைத் தேடி அலைவோம். அதை நாம் ஏன் உற்பத்தி செய்யக்கூடாது என தோன்றியது. அதன்படி நான் இலை வாழை விவசாயத்தில் இறங்கி விட்டேன். முதலில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தேன். மதுரை மேலூர் அருகில் உள்ள தாமரைப்பட்டியில் இருந்து முப்பட்டை நாடு என்ற நாட்டு ரக வாழைக்கட்டைகளை வாங்கி வந்து நடவு செய்தேன். மரங்களை வளர்த்து இலைகளை அறுவடை செய்தபோது பலர் நேரடியாக வந்து இலைகளை வாங்கிச் சென்றார்கள். இது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இதனால் மெல்ல மெல்ல சாகுபடிப் பரப்பை அதிகரித்தேன்.

இப்போது 12 ஏக்கரில் இலை வாழை சாகுபடி செய்கிறேன்’’ என்று இலை வாழை சாகுபடிக்கு வந்த கதையைக் கூறிய ராமநாதன், அதன் சாகுபடி முறை குறித்து விளக்கினார்.
“இலை வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு சட்டிக்கலப்பை கொண்டு அரை அடி ஆழம் இருக்குமாறு 2 முறை உழவு செய்வோம். பின்பு கொக்கிக் கலப்பை கொண்டு 2 மு றை உழவு செய்வோம். அதன்பிறகு ரொட்டேவேட்டர் கொண்டு ஒரு உழவு ஓட்டுவோம். இதனால் நிலம் க ட்டி இல்லாமல் பொலபொலப்பாக மாறும். உழவுக்குப் பிறகு ஒரு அடி அளவுக்கு குழியெடுத்து, அதில் காய்ந்த குப்பை எருவை நிரப்பி, வாழைக்கட்டையை ஊன்றி மண் மூடுவோம். ஒரு கட்டைக்கும், மற்றொரு கட்டைக்கும் தலா ஐந்தரை அடி இடைவெளி இருப்பது போல் பார்த்துக்கொள்வோம். அதேபோல வரிசைக்கு வரிசை இதே இடைவெளி இருப்பது போல் நிர்வகிப்போம். வாழைக்கட்டையை நடவு செய்த 2வது நாளில் மண் அணைத்து மிதிப்போம்.

வாழைக்கட்டைக்கு அருகில் ஒரு வாய்க்கால் அமைப்போம். அந்த வாய்க்காலில் கட்டை நடவு செய்த அன்று ஒரு பாசனம் செய்வோம். அதன்பிறகு கட்டையில் தளிர் வரும் வரை பாசனம் கிடையாது. நடவு செய்ததில் இருந்து 10வது நாளில் கட்டையில் குருத்து வெளிவரும். குருத்து நன்றாக வந்தபிறகே 2வது பாசனம் செய்வோம். இடையில் பாசனம் செய்தால் அழுகல் நோய் வந்து பாதிப்பு ஏற்படும். குருத்து வந்தபிறகு செடிக்கு பக்கத்தில் உள்ள வாய்க்காலில் காய்ந்த ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் சிறிது வேப்பம்புண்ணாக்கு கலந்து இட்டு மண்ணால் மூடிவிடுவோம். பின்பு அதற்கு பக்கத்தில் ஒரு வாய்க்கால் அமைப்போம். இந்த வாய்க்கால் இரண்டு வரிசை செடிகளுக்கு இடையே சென்டர் பாய்ன்டாக அமையும். இந்த வாய்க்காலில் 5 நாளுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்வோம். தேவையைப் பொறுத்து தோட்டத்தில் முளைக்கும் களைகளை அகற்றுவோம். கட்டை ஊன்றியதில் இருந்து 3வது மாதத்தில் தோட்டத்தில் காய்ந்த நிலையில் இருக்கும் சருகுகளை அகற்றுவோம். இதுபோல் சருகுகள் அதிகமானால் அகற்றிக் கொண்டே இருப்போம். சருகுகள் அதிகமானால் தோட்டத்தில் சரியான காற்றோட்டம் இருக்காது. இடத்தை அடைத்துக்கொள்ளும். இதனால் மரம் மற்றும் இலைகளின் வளர்ச்சி பாதிக்கும். இதனால் எப்படியும் 3 மாதத்திற்கு ஒருமுறை சருகுகளை அகற்றுவோம். சருகுகளை அகற்றி இடைவெளியை அதிகரித்தால் மரத்தின் வீரியம் அதிகரிக்கும். மரத்தில் இருந்து அகற்றும் சருகுகளை வாய்க்காலிலேயே போட்டுவிடுவோம். அது மட்கி தோட்டத்திற்கு நல்ல உரமாகும்.

சருகு அகற்றுவதைப் போல 3 மாதத்திற்கு ஒருமுறை இயற்கை உரமிடுவோம். 2வது முறை உரமிடும்போது, 2 வரிசைகளுக்கு நடுவில் உள்ள வாய்க்காலின் ஒரு ஓரத்தில் ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையை இட்டு மண்ணை மூடுவோம். அப்போது செடிகளுக்கு அருகே மண் அணைத்து மிதிப்போம். தூரில் எந்தளவுக்கு மண் நிரம்புகிறதோ, அந்த அளவுக்கு பக்கக் கட்டைகள் அதிகரிக்கும். கட்டை நடவு செய்ததில் இருந்து 2 மாதம் வரை வரும் பக்கக் கிளைகளை வெட்டி அகற்றி விடுவோம். 5வது மாதத்திற்கு வரும் பக்கக்கிளைகளை விட்டுவிடுவோம். அதுதான் நல்ல பலன் கொடுக்கும். 4வது மாதத்தில் இருந்து மரத்தில் இலைகளை அறுவடை செய்யலாம். அதற்கு முன்பாக அறுக்கக்கூடாது. மரங்கள் பாதிப்படையும். 4 மாதத்தில் தொடங்கி 7 மாதம் வரை வாரம் ஒருமுறை இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலைகளை அறுவடை செய்வோம். ஒரு ஏக்கரில் உள்ள சுமார் 1500 தாய் மரங்களில் இருந்து 7500 இலைகள் மாதந்தோறும் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு இலையை சராசரியாக ரூ.4 என விற்பனை செய்கிறோம். இதன்மூலம் ரூ.30 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது.திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு குலையுடன் கூடிய வாழை மரங்களை வாங்கி செல்கிறார்கள்.

குலையுடன் கூடிய மரங்களை ஜோடி ரூ.600 என விற்பனை செய்கிறோம். ஒரு தாய் மரத்திற்கு குறைந்தது 4 பக்கக் கன்றுகள் வரும். அதில் இருந்து இலைகளை அறுவடை செய்கிறோம். பக்கக்கிளைகளின் இலை மற்றும் குலைகளுடன் கூடிய மரங்கள் மூலம் கூடுதலாக ரூ.15 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானமாகக் கிடைக்கும். இதில் பராமரிப்புக்கென்று ரூ.35 ஆயிரம் செலவு போனாலும், ஒரு ஏக்கருக்கு ஒரு மாதத்தில் ரூ.10 ஆயிரம் லாபம் கிடைக்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. கட்டை நடவு செய்த 8வது மாதத்தில் இருந்து இலை அறுவடையை நிறுத்திவிடுவோம். 10வது மாதத்தில் வாழைத்தார்களை விற்பனை செய்வதன் மூலம் மேலும் ஒரு குறிப்பிட்ட வருமானம் உபரியாக கிடைக்கிறது. இது எல்லாம் நமக்கு போனஸ்தான்’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராமநாதன்.
தொடர்புக்கு:
ராமநாதன்: 98653 88692
93632 96762.

வியாபாரிகளுக்கு விற்பனை இல்லை

சிவகங்கை திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் வீட்டு சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் போன்றவற்றுக்கு ராமநாதன் தோட்டத்து வாழை இலைதான் விருந்துக்காக செல்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேரடியாக விற்பனை செய்கிறார். வியாபாரிகள் வந்தால் நோ சொல்லி விடுகிறார். கூடுதல் விலை கொடுத்தாலும் நான் வியாபாரிகளுக்கு விற்க மாட்டேன். மக்கள் குறைந்த விலைக்கு வாங்கி சென்று பயன்படுத்தட்டும் என்கிறார் ராமநாதன்.

தேங்காய் எண்ணெய்

ராமநாதன் தோட்டத்தில் 500 தென்னை மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய்களைக் காய வைத்து, செக்கில் ஆட்டி, எண்ணெய்ப் பிழிந்து விற்பனை செய்கிறார். இந்த எண்ணெயில் எந்தப்பொருளையும் கலக்காமல் ப்யூர் தேங்காய் எண்ணெயாக உருவாக்குகிறார். இதில் ஏலக்காயை மட்டும் சேர்த்து இயற்கையான தேங்காய் எண்ணெயாக உருவாக்குகிறார். இதன்மூலமும் கூடுதல் லாபம் பார்க்கும் ராமநாதன், மதிப்புக்கூட்ட வேண்டும் என நினைக்கும் மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்