கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: கழுகுகள் உயிரைக் குடிக்கும் மருந்துகளை ஒரு முறைக்கு மேல் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகமான கழுகுகள் உள்ளன. இந்த கழுகு இனம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நிமுஸ்லைட், புளுநிக்சின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு செலுத்துகின்றனர்.

மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. எனவே, இந்த மூன்று மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே உள்ளன.

இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க 4 மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கழுகுகளை பாதுகாக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக கழுகுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த மருந்துகளை ஒருமுறை மட்டும் 30 மில்லி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பயன்படுத்த தடை உள்ளது. பறவைகளை பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, அரசு தரப்பின் வாதத்தை விரிவாக எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related posts

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!

இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி!