பாமகவுக்கு பிரசாரம் செய்ய சுணக்கம் காட்டும் கூட்டணி கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பாமகவை தனியா கழட்டி விட்டுட்டாங்க போல..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதில்லை என மன்னர் மாவட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில் பாமக, அமமுக, ஓபிஎஸ் என கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மன்னர் மாவட்டத்தில் இருந்து பாஜ, அமமுக, தமாக, ஓபிஎஸ் நிர்வாகிகள் யாரும் பிரசாரத்திற்கு செல்லவில்லையாம். இதனால் பாமக பெருத்த ஏமாற்றத்தில் உள்ளதாம் மன்னர் மாவட்ட பாமக நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனராம். இந்த தகவல் அந்தெந்த கட்சியின் மாநில தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

‘காக்கியை பார்த்ததும் அரஸ்டுக்கு பயந்து டீக்கடைக்குள் நுழைந்தார்களாமே தாமரை நிர்வாகிகள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் தாமரை கட்சி சார்பில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்திற்கு வந்திருந்த தாமரை கட்சி நிர்வாகிகள் காக்கியை கண்டவுடன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கி குடிப்பது போலும், வடை வாங்கி சாப்பிடுவது போலும் நடிக்க தொடங்கினார்களாம்… ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த காக்கிகள், மறியல் போராட்டத்திற்காக வந்த பின்னர் எதற்கு டீக்கடைக்குள் சென்று பதுங்குகிறீர்கள், அரஸ்ட் ஆக வாங்க என கூப்பிட்டார்களாம்… ஆனால் தாமரை கட்சியினர் நீங்க வேற சார் நாங்க டீ சாப்பிட தான் வந்தோம், நீங்கள் எங்களை தப்பா நினைச்சிட்டீங்க என கூறி சமாளிக்க பார்த்தனர். உங்களை அரஸ்ட் பண்றதை தவிர வேறு வழியில்லை என கூறி கைது செய்து அழைத்து சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பத்திர பதிவாளர் அலுவலக ரெய்டில் விஜலென்ஸுக்கே அதிர்ச்சி கொடுத்த கும்பல் எது..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்தில் மாநகரத்தின் ஓரமாக அமைந்துள்ள ‘பாடி’ என முடியும் ஊர் பத்திர பதிவு அலுவலகத்தில சமீபத்தில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்துச்சு. மாலை நேரத்தில விஜிலென்ஸ் போலீசார் அலுவலகத்தின் உள்ளே நுழைஞ்சதும் அதன் வெளிப்புற கதவை மூடிட்டாங்க. அதோட உள்ளே இருப்பவங்க வெளியே ேபாகாமலும், வெளியே இருப்பவங்க உள்ளே வராமலும் பாத்துக்கிட்டாங்க.

இதனால பத்திரப்பதிவுக்கு வந்தவங்க, இடைத்தரகர்கள் என சிக்கியவர்கள் விழிபிதுங்க, இன்னொரு கும்பலும் அதிர்ச்சி அடைந்தாங்களாம். அவர்கள் மாலையானதும் தினசரி மாமூல் வாங்க சென்ற டுபாக்கூர் நிருபர்களாம். இதனால என்ன செய்வதுன்னு யோசிச்ச இந்த கும்பல் மெதுவா விஜிலென்ஸ் போலீசாரிடம் ெசன்று, ‘சார், நாங்க பத்திரிகைக்காரங்க’ன்னு மெதுவாக காதை கடித்தார்களாம். அவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட விஜிலென்ஸ் போலீசார் கதவை திறந்து அவங்களை மட்டும் வெளியில விட்டாங்களாம். ஏற்கனவே அதே ஊரில் ஆர்டிஓ சோதனை சாவடியில நடத்தப்பட்ட ரெய்டின்போதும், அங்கு சிக்கிய அலுவலர்களின் டைரியில் மாதாமாதம் டுபாக்கூர்களில் யார், யாருக்கு கப்பம் கட்டுகிறார்கள் என்ற பட்டியலே இருந்ததாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய பொறுப்பை பிடிக்க 2 அதிகாரிகள் பிரம்மப்பியத்தனம் பண்ணிட்டு இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து நீர்வளத்துறையின் அணைகள் பிரிவில் முக்கிய பொறியாளராக அன்பானவர் இருக்கிறார். இலைக்கட்சியின் இரு மாஜி மந்திரிகளுக்கு நெருக்கமாக இருந்து, கோலோச்சி வந்தவர், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் அதே கெத்தில் வசூல் நடத்துவதாக ஊழியர்களிடம் டாக் அதிகரித்தது. இதற்கேற்ப இவர் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களும் எழுந்து, சமீபத்தில் விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட நெருக்கடி, மனஉளைச்சலில் தானாகவே பணியிட மாற்றம் கேட்டும் விண்ணப்பித்தார். தேர்தலால் கோரிக்கை கிடப்பிற்கு போய், இப்போது மாற்றம் வழங்குவதற்கான பணிகள் வேகமடைந்துள்ளது. இப்போது, இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறதாம். பட்டியில் முடியும் ஊர்க்கால்வாய் அதிகாரியானவரும், பாம்பு ஆலயம் ஊர் ஆற்று அதிகாரியும் இந்த பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார்களாம். காரணம், இருவருமே தூங்கா நகரத்துக்காரர்கள். சொந்த ஊரில் பணி கிடைத்தால் பலன் உண்டென நினைக்கும் நிலையில், சீனியாரிட்டியில்தான் இடம் கிடைக்குமாம். இதற்கிடையில் வேற்றூர்காரர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் இருப்பது, தூங்கா நகரத்து இருவரையும் கலங்க வைத்திருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சந்தன மர கட்டைகள் பதுக்கிய வழக்கு புதிய தலைவலியை கொண்டு வந்திருக்காமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தில் அமைச்சர் தேனீயின் மகளுக்கு சொந்தமான இடத்தில், தனியார் சந்தன ஆயில் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. இதனை கேரளாவைச் சேர்ந்தவர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வனத்துறை அதிகாரிகள், புதுச்சேரியில் சந்தன ஆயில் கம்பெனிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 டன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி தோல்வி அடைந்தால் ரொம்ப அப்செட்டில் இருக்கும் புல்லட்சாமி, சந்தன கட்டை விவகாரம் அரசுக்கு கெட்ட பெயரை தந்துள்ளதாக, அமைச்சரை அழைத்து புலம்பியுள்ளார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து கேட்டறிந்த புல்லட்சாமி, அமைச்சர் மற்றும் புதுவை வனத்துறை அதிகாரிகளை அழைத்து ஒரு மணி நேரம் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி உள்ளார். பின்னர் இவ்விகாரத்தில் இருந்து அமைச்சரை காப்பாற்ற வேண்டும். அரசுக்கும் கெட்ட பெயர் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு புல்லட்சாமி உத்தரவிட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு