சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொது செயலாளர் வைகோ: கடும் நிதிநெருக்கடி சூழ்நிலையிலும் திறன் மிக்க நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டி வாழ்த்துகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,“எல்லோருக்கும் எல்லாம்” என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து-செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: எரிவாயு மானியம், நியாய விலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், சாதிவாரி கணக்கெடுப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போதாவது புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மக்களுக்காக வளமான தமிழகத்தை ஏற்படுத்த மக்களுக்கான ஆட்சியாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழக அரசு இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இரு நாட்கள் செலுத்த வேண்டிய வட்டியை சேமித்தால் ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டிவிட முடியும். புதிய கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் உற்பத்தியை அதிகரித்தல், வரியில்லாத வருமானத்தை அதிகரித்தல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாஜ தலைவர் அண்ணாமலை: ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள்.
அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன்: ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2500 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் திமுக அரசு, கல்விக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது தமிழக இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்

4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி