ஜாமீனில் வந்த சென்னை ரவுடி கோவை சிறை வாசலில் கைது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவரா?

கோவை: கோவை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெறி தினேஷ், ஏழுமலை ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்குகள் தொடர்பாக சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ராபின் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டில் இருந்து இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. ஏ பிளஸ் ரவுடியான இவர் பலமுறை ஜாமீன் பெற முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து ராபின் கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து சென்னைக்கு செல்ல முயன்றார். அப்போது சென்னை மடிப்பாக்கம் போலீசார் அவரை சிறை வாசலிலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னையில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ராபினுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ராபினை போலீசார் கைது செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ராபினை சென்னைக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்னரே எந்த வழக்கு தொடர்பாக ராபின் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்