பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் மரணம்; ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பு என்று அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் – வேதனையும் அடைந்தேன். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும்-ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்கின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும். ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மிக இளம் வயதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். படுகொலைக்குக் காரணமான உண்மையான கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூலிக்குக் கொலை செய்யும் கும்பல் சர்வ சாதாரணமாக நடமாடுவதும், படுகொலைகளை நிகழ்த்தி வருவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி வருகின்றது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சளைக்காமல் களப்பணி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். அறிவாற்றல் மிக்க சிறந்த ஆளுமை. எனது பாசமிக்க நண்பராக விளங்கியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்: ஏராளமான இளம் வழக்குரைஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். இந்த கோழைத்தனமான செயலின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா: பட்டியலின மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொண்டவர். அவரது மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்: தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகத்தின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்து வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்புலத்தில் உள்ள அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும்.

Related posts

பூங்கா செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணி துவக்கம்

வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு ரூ.7 லட்சத்தில் நவீன கருவிகள்: நீலகிரி திமுகவினர் வழங்கினர்

அவினாசி-அத்திக்கடவு திட்டம் தாமதம் ஆவதற்கு திமுக அரசு காரணமல்ல: அமைச்சர் முத்துசாமி விளக்கம்