அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த அதிமுக; தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

சென்னை: தொடர்ந்து 10 தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த அதிமுக தேர்தல் பணிகளில் கோட்டை விட்டவர்களை களை எடுக்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உருவாகி டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என பலரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் உச்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை பெற்று அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால் அவரது தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது அதிமுக. அதோடு, அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

இவ்வாறு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் சில இடங்களில் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுகவினரை மனவருத்தத்துக்குள்ளாக்கியது. அதிமுக ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்திலெல்லாம் தமிழக பாஜக உள்ளே நுழைந்து களப்பணியில் இறங்கியது. அதிமுகவின் அலட்சியத்தை பாஜக பயன்படுத்தி கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் கணிப்புகளில் வெளிவந்தபடியே, தேர்தல் முடிவும் அதிமுகவுக்கு பாதகமாகிவிட்டது.

இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்திகளையும், ஆதங்கங்களையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தும் வரை நிலைமை சென்றது. இந்த சூழ்நிலையில், மற்றொரு தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதற்காக விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதிமுகவைப் பழைய நிலைக்குக் கொண்டு வரப் போவதாக சசிகலா கூறியுள்ளார். பிளவு ஏற்பட்டுள்ள கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. அதேநேரம் பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைய செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்தும், தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆராய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் வரும் 19ம்தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டங்கள் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நடப்பு எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்கின்றனர்.

Related posts

மாணவியிடம் சில்மிஷம் அரசு டாக்டர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்