பிரகாச வாழ்வருளும் பத்ரிநாத் பயணம்!

“செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின்
வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும்
கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய்
காண்பேனே’’

ஆழ்வார்கள் திருமாலின் வடிவங்கள் இருக்கும் இடங்களைத் தேடி தேடி பாடல்கள் பாடி பாடி மனம் உருகி வேண்டினார்கள். அவ்வாறு அவர்கள் பாடிய பெருமாள் வடிவங்களை திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட இடங்கள் என்றும் வைணவர்கள் போற்றிப் புகழ்ந்தனர். அதில் மிக முக்கிய கோயில், பத்ரிநாத் கோயில். உத்தரகாண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் நகரில் அமைந்துள்ளது, இத்திருக்கோயில். வைணவர்களின் 108 திவ்ய தலங்களில் திவ்ய க்ஷேத்திரத்தில் பத்ரிகாசிரமம் 99வது க்ஷேத்திரமாகும்.

ஆதி காலத்தில், திருமால் தவம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், பூவுலகில் மலைகளும் பனிப்படலங்களும் படர்ந்த இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இங்கே அவர் நெடுங்காலமாகத் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அச்சமயம், வைகுண்டத்தில் திருமால் இல்லை எனவே, திருமகளான மகாலட்சுமி பூவுலகில் எழுந்தருளி தவம் செய்யும் திருமாலுக்கு நிழற்குடையாக இலந்தை மரமாக வீற்றிருந்தாள். ஏன் என்றால், திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டிருந்தார். அவருக்கு குடையாக ஆதிசேஷன் விளங்கினார்.

வைகுண்டத்தில், பாம்பனையின் மேல் சயனிக்க, ஆதிசேஷன் குடைப் பிடிக்கிறார். பத்ரிகாசிரமத்தில், தவம் செய்யும் நேரத்தில் ஆதிசேஷன் உடன் வரவில்லை. ஆகையால், திருமகளே இலந்தை வடிவத்தில் விருட்சமாகவும், கிளைகள் பரப்பி அடர்ந்து வீற்றிருந்தாள். தவம் முடித்ததும், அங்கே திருமால் நரநாராயணன் காட்சியளித்தார். வேதங்களை சிஷ்டித்து ஞானத்தை உண்டாக்கினார் என்றும் கூறுவதுண்டு. எவ்வாறு எனில், சில மனிதர்களைப் படைத்து திருமந்திர உபதேசம் செய்தார்.

பல சீடர்கள் இங்கே கூடினர். இவர் திருமந்திர உபதேசம் செய்தார். அப்பொழுது திருமகள், சீடர்கள் அனைவருக்கும் உணவினை சமைத்துக் கொடுக்கும் தாயாராக அங்கே வீற்றிருந்தாள்.
பத்ரிநாதனுக்கு உதவி புரிந்தாள்“பத்ரி’’ என்றால் இலந்தை என்பது பொருள். இலந்த மரமாக வீற்றிருந்த திருமகளை கொண்டு, “பத்ரிநாராயணன்’’ என்று தம்மை அழைத்துக் கொண்டு, இத்தலத்திற்கு “பத்ரிநாத்’’ நகர் அமைத்தார். இவ்வாறு, திருமால் விண்ணில் இருந்து மண்ணில் எழுந்தருளி மக்களினுடைய பாவங்களைத் தீர்க்க, அவரே நாராயணனாக காட்சி தந்த சமயம் விண்ணுலகில் ஓர் அற்புதம் நடந்தது.

சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம்

விண்ணுலகில் சிவபெருமான் அந்தி நேரத்தில் தன் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அச்சமயம், பார்வதி தேவி சிவபெருமானை பார்த்து, நீலகண்டரே உமக்கும் ஐந்து தலைகள், பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளன, சில சமயங்களில் இருவருக்கும் ஒன்று போன்று இருப்பதினால், சற்று தடுமாற்றும் அடைகிறேன், என்றார்.

பராசக்தி, உன்னுடைய ஐயத்தை இன்றே கலைந்து எறிகிறேன் எனக் கூறி நேரே சத்தியலோகம் சென்றார். அங்கே பிரம்மன், சரஸ்வதி தேவியோடு உரையாடிக் கொண்டிருக்கின்ற பிரம்ம
தேவன், சிவபெருமானை கண்டதும், வருக.. வருக.. என வரவேற்றார். அவரை என்ன ஏது என்று கேட்காமல், அவருடைய ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளிவிடுகின்றார். அப்படி கிள்ளியதும், அவர் கைகளில் தலையானது ஒட்டிக் கொண்டது. கைகளை விரித்தும், கை உள்ளங்கையில் ஒட்டிய பிரம்மனின் தலை கீழே விழவே இல்லை. இதை பார்த்து, இது என்ன என்று அவர் கேட்க, பிரம்மா சிரித்துக் கொண்டே, இதுதான் “பிரம்மஹத்தி தோஷம்’’ என்றார்.

இதை எப்படி போக்குவது என்று எனக்கு தெரியவில்லையே? என்று பலரைக் கேட்டும், அதற்கான விடை கிடைக்காத பொழுது, “நீ பூலோகத்தில் சென்று ஒரு பதிவிரதை கையினால் சோறிட்டால், உன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்’’ என்றார், விஷ்ணு. அவ்வாறே சிவபெருமான் கைலாயம் விட்டு பூவுலகில் எழுந்தருளினார்.

சோறு இட்ட பதிவிரதை யார்?

இமயமலை பனி எங்கும் கொட்டி கிடக்கின்ற பத்ரிகாசிரமத்தை, தேடி வருகின்றார் சிவபெருமான். வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. மந்திரத்தினுடைய சக்தியால் அனைவரும் தியானித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில், சிவபெருமான் இங்கே எந்தப் பதிவிரதை இருக்கப் போகிறார்? யார் எனக்கு சோறு இடப் போகிறாள்? என்ற ஐயத்தோடு அவர் அந்த இடத்தைச் சுற்றிலும் பார்க்க, அப்பொழுதுதான் சீடர்கள் வரிசையாக அமர்ந்தனர். அவர்களுக்கு ஒரு பெண்மணி சோறு இட்டுக் கொண்டிருப்பதை கண்டார்.

உடனே அங்கு விரைந்து சென்று, “தாயே.. பிச்சாம்தேஹி’’ என்று அவர் குரல் கொடுத்ததும், கரண்டியோடு பாத்திரத்தில் இருந்த சோற்றை எடுத்து திரும்பிப் பார்க்கிறாள். சிவபெருமான், கையில் கபாலத்தோடு ஏந்தி நிற்க, மகாலட்சுமி ஆனவள் அந்த கரங்களுக்கு சோறை இடுகின்றாள். அடுத்த கனமானது சிவன் கையில் ஒட்டிக் கொண்டு இருந்த பிரம்மனுடைய தலை கீழே விழுந்து சுக்கல் நூறாக உடைந்து. இந்த இடத்தை “பிரம்மா கபாலம்’’ என்று அழைக்கப்பட்டது.

மூதாதையர்களுக்கு இங்கே பிண்டமிடலாம் எப்படி கயாவில் அன்னமிட்டால் மூதாதையர்கள் ஏற்றுக் கொள்வார்களோ, அதே போன்று இந்த இடத்தில் பிண்டமிடலாம். இறந்தவர்களுக்கு மட்டும்தான் பிண்டமிட வேண்டும் என்பதல்ல. நமக்கு நாமே பிண்டமிடக்கூடிய ஒரே இடம் இந்த பத்ரிகாசிரமம் ஆகும்.

தனிச் சிறப்பு

மார்கழி முதல் சித்திரை வரையில், தேவர்கள் தங்கி இருந்து பத்ரிநாராயணனை வணங்கி தரிசனம் செய்வார்கள் என்ற ஐதீகம் இருப்பதால், இந்த பத்ரிகாசிரமம் கோயில், ஆறு மாதங்கள் மட்டும் திறந்திருக்கும். வைகாசியில் இருந்து கார்த்திகை வரை மனிதர்கள் தரிசனம் செய்யலாம். அற்புதம் என்னநடை சாத்துகின்ற பொழுது, ஆறு மாத காலத்திற்கும் நெய் ஊற்றி விளக்கு ஏற்றிவிட்டு சென்றால், வைகாசியில் கோயில் நடைதிறக்கும் பொழுதே, அங்கே தீபமானது நன்றாக எரிந்து, தீபஜோதியாக இருந்து பக்தர்களுக்கு அருள் புரியும்.

இந்த அற்புத காட்சி, வேறெங்கும் கிடையாது. நாம் முதல் நாள் தரிசனம் செய்ய வேண்டும் என்றால், நூற்றி ஒரு ரூபாய் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும். இங்கிருக்கும் நாராயணனை “பத்ரி விஷால்’’ என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த கோயிலில், பல சிறப்புகள் உள்ளன. குபேரன் பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்ததாக, ஒரு புராண வரலாறு இருப்பதினால், குபேரனுக்கும் இங்கே கோயில் உள்ளது. இந்த தலம், இங்கிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் அழகாபுரி என்ற இடத்தில் உள்ளது.

குபேர பட்டணத்தில் உற்பத்தியாகும் அலகநந்திநதி, தேவப்பிரயாகையில் பாகீரதியுடன் கலந்து, கங்கையாக பரிமளக்கின்றாள். இங்கே பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இவ்விடத்தில் வந்து, எம்பெருமானின் அழகான திவ்ய தேகத்தைக் கண்டு, பாசுரமாக இசைத்திருக்கின்றனர். இங்கே எழுந்திருக்கும் திருமால், சாளக்கிராம கல்லாக உருவானவர்.

9 ஆம் நூற்றாண்டில், ஆதிசங்கரர் இங்கே எழுந்தருளி, சாளக்கிராமக்கல்லில் இருக்கின்ற திருமாலின் உருவத்தை, அருகில் இருக்கும் “சக்கர அலக்நந்தா’’ என்ற குகையில் சக்கரத்துடன் பிரதிஷ்டை செய்தார். அதன் பின்பு, 14 ஆம் நூற்றாண்டில், கார்வால் அரசர் குகையில் இருந்த சிலையை எடுத்து, பத்ரிநாத் கோயிலைக் கட்டி, அதனுள் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாற்று
சான்றுகள் தெரிவிக்கின்றன.

இங்கு மூலவர், பத்ரிநாராயணன். இறைவி; அரவிந்தவல்லி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோயிலில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 1) கருவறை – சடங்குகள் நடத்தப்படுகின்றன, 2) தரிசன மண்டபம், 3) யாத்திரிகள் கூடும் இடம் என்று மூன்று நிலைகளில், அழகாகக் கோயிலை கட்டியுள்ளார். 15 சிலைகளும் உடன் வைத்தார்.

இங்கு ஐந்து நதிகள் பாய்ந்து ஓடுகின்றன

1) தப்த குண்டம்.
2) நாரத குண்டம்.
3) கூர்ம தாரா குண்டம்.
4) பிரகலாதா தாரா குண்டம்.
5) ரிஷிகங்கர்.

கூர்மதாரா தீர்த்தம் அன்ன பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப் படுகின்றன. தப்த குண்டம் தீர்த்தத்தில் நீராடிய பின்புதான் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஸ்நானம் செய்வது மிகவும் புண்ணியம். இந்த தீர்த்தம் அதிசயம் நிறைந்ததும்கூட. ஒரு பக்கம், வெந்நீர் ஊற்று நீர் வரும். மறுபக்கம், குளிர்ந்த ஊற்று நீர் வரும். இந்த தப்த குண்ட தீர்த்தமானது, பெருமாளின் பாதத்தில் உற்பத்தியாகுகிறது.

வெந்நீராக மாறுகின்றது காரணம் என்ன?

முன்னொரு சமயம், அக்னி பகவானுக்கு திடீர் என்று உணவு செரிமானம் ஆகாமல், வயிற்று வலி ஏற்பட்டு, பெரும் அவதிக்கு உட்பட்டார். பிரச்னையில் இருந்து வெளியே வர திருமாலின் உதவியை நாடினார். திருமால், அக்னியை பார்த்து, “நீ அதிகமாக நெய்யை சேர்த்துக் கொள்கிறாய், அப்படி அதிகமாக சாப்பிடுகின்ற பொழுது அஜீரணம் ஏற்படாதா? அதுவே உன்னுடைய வயிற்று வலிக்கு காரணம்’’ என்று கூறினார்.

“வலி நிவாரணம் பெற, நான் என்ன செய்ய வேண்டும்’’? என்று அக்னி பகவான் கேட்க, அதைக் கேட்ட திருமால் சிரித்தார். “அப்படி என்றால் நான் அக்னி குண்டத்தில் நெய்விட வேண்டாம் என்று சொல்லிவிடட்டுமா?’’ என்றும் மீண்டும் அக்னி பதிலுறைக்க, திருமால் நகைத்துக் கொண்டே, “அப்பா நீ அக்னி, யாகத்தில் நெய்விடாமல் இருந்தால், எப்படி?.. இந்திரன் மற்றும் மற்ற தேவர்களுக்கும் போய் சேருமா? ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம். அதற்கு மாற்று வழியை நான் கூறுகின்றேன். நீ தண்ணீராக மாற வேண்டும்’’ என்றார்.

“அதுதானே வருணபகவான் செய்து கொண்டிருக்கிறார்! நான் என்ன செய்யறது?’’ என்று கவலையுடன் அக்னி பகவான்கூற, “நீ தண்ணீராக மாறி அதில் பக்தர்கள் நீராடினால், உன்னுடைய பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்’’ என்று கூறினார், திருமால்.அவ்வாறே அக்னி பகவான், தண்ணீராக மாறினார். பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள நீராடினார்கள். மக்களுக்கும், அக்னி பகவானுக்கும் விமோசனம் கிடைத்தது.

பத்ரிகாசிரமம் சுற்றியுள்ள புனித தலங்கள்

1) யோக்தியான் பத்ரி.
2) பவிஷ்ய பத்ரி.
3) ஆதிபத்ரி.
4) விருத்தா பத்ரி.
5) பத்ரி விஷால்.

அபிஷேக பிரசாதம்

பத்திரிநாதருக்கு, தேன் மற்றும் பாலினால் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. “மகாபோக்’’ என்ற பிரசாதம், சுவாமிக்கு நிவேதித்து, அதனை பக்தர்களுக்கு
பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

இறைவனிடம் வேண்டுதல் வைத்தல்

நம் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால், பத்ரிநாதனை மனமார வேண்டிக் கொண்டு, தேன், பால் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதால், மிக விரைவாக திருமணம் நடைபெறுகிறது. சாதாரணமாக, இக்கோயிலுக்கு செல்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். பத்ரிநாதன் மனதுவைத்தால் மட்டுமே, நாம் அங்கே செல்ல முடியும். ஆகவே, நாம் அருகில் உள்ள திருமால் கோயிலில், 3,5,7,11,16 வாரங்கள் என்று மனமார விரதம் இருந்து, தேன் பால் கொடுத்தால், திருமணத் தடை நீங்கும்.

எப்படி செல்வது

முதலில் டில்லிக்கு சென்றுவிட வேண்டும். அங்கிருந்து, அவரவர் வசதிக்கு ஏற்ப ரயில், விமானம், போன்றவற்றின் மூலம் பயணிக்கலாம். பொதுவாக பயணிப்பது, டில்லியில் இருந்து ஹரித்வாருக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு இருந்து, ருத்ரபிரேயாக் வழியாக, ஜோஷிமத், கோவிந்த்காட் ஆகியவைகளை கடந்து பத்ரி க்ஷேத்திரத்தை அடைகிறார்கள்.

பொன்முகரியன்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்