புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி; மாநில பாஜ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாஜி தலைவர் சாமிநாதன் போர்க்கொடி

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜ சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்ததால் மாநில தலைவர் செல்வகணபதியை கட்சி தலைமை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் தலைவர் சாமிநாதன் போர்க்கொடி தூக்கி உள்ளார். புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வைத்திலிங்கம் பாஜ வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். குறிப்பாக புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் ஏனாம், இந்திராநகர் தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தைவிட அவர் கூடுதலாக வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி பாஜ தோல்விக்கு தற்போது தலைவராக உள்ள செல்வகணபதி தான் காரணம் என்றும் அவரை மாற்ற கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி சுயநலத்தோடு தன் சொந்த நிறுவனம் போல் கட்சியை தவறாக வழி நடத்தியுள்ளார். முதல் முறையாக ஆளுங்கட்சி அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு புதுச்சேரி தலைவர் செல்வகணபதியே முழு காரணம். எனவே தார்மீக பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றாமல் குறுக்கு வழியில் நியமன சட்டமன்ற உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை அனுபவித்து ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த மாநில தலைவர் செல்வகணபதியை உடனடியாக தேசிய தலைமை மாற்ற வேண்டும் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் பாஜ படுதோல்விக்கு மாநில தலைவர் அண்ணாமலையின் யாரையும் மதிக்காத தடாலடி போக்கு தான் காரணம் என அக்கட்சியிலே கலக குரல் எழும்பி வரும் சூழ்நிலையில் புதுவையிலும் மாநில தலைமைக்கு எதிராக முன்னாள் தலைவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

பைடன் உளறிக்கொட்டுவதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி? ஜனநாயக கட்சியில் பரபரப்பு திருப்பங்கள்