ஒரு மில்லி லிட்டரில் 75,000 பாக்டீரியாக்கள்; சுத்தப்படுத்தாத தண்ணீர் பாட்டிலில் அசுர வேகத்தில் வளரும் பூஞ்சைகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


தாகம் தணிக்கும் தண்ணீர் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் சுத்தமான குடிநீரை பெறுவது என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். குழாய்கள், கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு நீராதாரங்களில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஆபத்துகளை ஏற்படுத்தும் அசுத்தங்களை கொண்டுள்ளது என்பது நமது கண்ணுக்கு தெரிந்த ஒன்று. இது ஒருபுறமிருக்க, சமீபகாலங்களாக தண்ணீர் பாட்டில்களை கடைகளில் வாங்கி உபயோகிக்கும் வழக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது. வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை பையில் வைத்து கொண்டு செல்வதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று, உடலுக்கு தேவையான நீரை அவ்வப்போது பருகிக்கொள்ளலாம். ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியமானது.

இரண்டாவதாக, அன்றாட வாழ்வின் நுகர்வு கலாச்சாரத்தை குறைக்கிறது, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கும் இது உதவுகிறது. ஆனால் அந்த தண்ணீர் பாட்டிலின் சுகாதாரத்தைப் பற்றி நாம் எப்போதும் யோசிப்பதே இல்லை. அதை குடிநீருக்காக மட்டும் தானே பயன்படுத்துகிறோம். எனவே குடிநீரை நிரப்புவதற்கு முன்பு குழாயின் கீழ் சில நொடிகள் காட்டி, தண்ணீரால் அலசிவிட்டு பயன்படுத்தினால் போதும். பாட்டில் சுத்தமாக இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. ஆனால் தண்ணீர் பாட்டில்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். சுத்தம் செய்யப்படாத தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து விடும். அதுவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து நீரியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்காவில் நீர் தரக் கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற வாட்டர் பில்டர்கூரு நிறுவனம் நடத்திய ஆய்வில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு குடிநீர் பாட்டிலில் சுமார் 2.8 கோடி காலனி உருவாக்கும் அலகுகள் (சிஎப்யூ) இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளது. சிஎப்யூ என்பது பொதுவான ஒரு மேற்பரப்பில், ஒரு காலனியை உருவாக்கும் திறன் கொண்ட, சாத்தியமான நுண்ணுயிரிகளின் அளவைக் குறிக்கும் அளவீடு ஆகும். இந்த ஆய்வில், மிகவும் அழுக்காகத் தோன்றும் பிற பொருள்களுடன், ஒரு தண்ணீர் பாட்டிலின் மாசுபாட்டு அளவு ஒப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கழிப்பறை இருக்கையின் மேற்பரப்பில் சராசரியாக 515 சிஎப்யூ இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதாவது கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டிலில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒவ்வொரு மில்லிலிட்டர் நீரிலும் சராசரியாக 75,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.மேலும் இந்த நுண்ணிய உயிரினங்கள், 24 மணிநேரத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு 2மில்லியன் வரை பெருகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்காவில் உள்ள பர்டுயு பல்கலைக்கழகத்தில் குடிநீர் பாட்டில் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 15 சதவீதம்பேர், நாளின் முடிவில் எஞ்சியிருக்கும் தண்ணீரை வெளியே கொட்டாமல், மீண்டும் தண்ணீரை நிரப்பி அப்படியே குடிக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. நாம் எல்லா இடங்களிலும் பாக்டீரியாவால் சூழப்பட்டே வாழ்கிறோம். அது ஒரு மோசமான விஷயம் அல்ல. நம் உயிர்வாழ பாக்டீரியாக்கள் தேவை. இந்த நுண்ணிய உயிரினங்கள் நமது தண்ணீர் பாட்டில்களுக்குள் மிகவும் வித்தியாசமான வழிகளில் நுழைகிறது.

முதலாவதாக தண்ணீரைக் குடிப்பதற்கு பாட்டிலுக்கு அருகில் வாயை கொண்டு செல்லும்போது. தோல், உதடுகள், ஈறுகள், பற்கள் மற்றும் நாக்கில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் (ஸ்டேபிலோகோகி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கி) பாட்டிலுக்குள் நுழைந்து, அந்த புதிய சூழலில் பெருகத் தொடங்குகின்றன. பாட்டிலை எடுக்க நம் விரல்களைப் பயன்படுத்தும்போது அல்லது பாட்டிலின் மூடியை திறக்கும்போது இதேபோன்று நடக்கும். ஏனென்றால் பல நபர்கள் தொடும் பொருட்களை நாமும் தொடுகிறோம். பாட்டிலை எடுத்துச் செல்லும் பைகளில், பள்ளி லாக்கர்களில், வேலை செய்யும் மேஜையில், சமையலறை சின்க் போன்றவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். அடிக்கடி பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால், இந்த நுண்ணுயிரிகள் அதில் நுழைந்து, காலனிகளை உருவாக்கி, அதிவேகமாக பெருகிவிடும்.

இதனால் தான் அவை வெறும் 24 மணி நேரத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 75 ஆயிரம் முதல் 2 மில்லியன் வரை கூட பெருகும் என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் போது, ​​பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்துபவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற சில லேசான அறிகுறிகள் ஏற்படலாம். பூஞ்சை ஒவ்வாமை உள்ளவர்களாக இருந்தால், நுண்ணுயிரிகள் நிரம்பிய பாட்டிலை பயன்படுத்தும்போது மூக்கடைப்பு, குமட்டல், தலைவலி, சோர்வு போன்ற பிற அசௌகரியங்களுடன் மேலும் எதிர்விளைவுகள் ஏற்படலாம். குழந்தைகள், முதியவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படலாம். எனவே நாம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

ஈரமும், சூடும் சாதகமாகிறது
‘ஈரப்பதமான, சூடான மற்றும் இருண்ட சூழல் (பிளாஸ்டிக் அல்லது அலுமினிய பாட்டில்களில்) பல பூஞ்சை இனங்களுக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. மிக மோசமாக பராமரிக்கப்படும் பாட்டில்களில், இந்த நுண்ணுயிரிகளின் வேலையை வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும். தண்ணீரில் சில துகள்களைக் காணலாம். இது பொதுவாக பாட்டிலின் அடிப்பகுதியில் கிடக்கும். அல்லது மூடியின் மேற்பரப்பில் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் படிந்து இருக்கும் என்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்த வேண்டும்
‘‘தண்ணீர் பாட்டிலை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கழுவுவதே சிறந்தது. பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, உணவுப் பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்தும் சோப்பு மற்றும் தண்ணீரையே பயன்படுத்தலாம். கையால் நுண்ணுயிரிகளை அகற்ற ப்ரஷ்களை பயன்படுத்தலாம். குடிநீரை நிரப்புவதற்கு முன்னர் அதை பாட்டிலை சிறிது நேரம் காய வைப்பதும் நல்லது. பாட்டில்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பழச்சாறுகள், ஆற்றல் பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பிற திரவங்களை பாட்டிலில் நிரப்பக்கூடாது. பாட்டில் தேர்வு என்பது ஒவ்வொரு நபரின் விருப்பத்தையும் சார்ந்துள்ளது. அதேநேரத்தில் அலுமினியத்தால் செய்யப்பட்ட பாட்டில்களை விட கண்ணாடி பாட்டில்களில் குறைவான நுண்ணுயிரிகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது,’’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதரபொருட்களில் குறைவாக உள்ளது
செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுகள் அல்லது பாத்திரங்கள் (சராசரியாக 1.4 மில்லியன் சிஎப்யூ), கணினி மவுஸ் (4மில்லியன்) மற்றும் சமையலறை சிங்க் (11மில்லியன்) ஆகியவற்றிலும் பாட்டிலுடன் ஒப்பிடும்போது பாக்டீரியாக்கள் குறைவாகவே இருந்துள்ளது. இது மட்டுமன்றி சீனாவில் உள்ள ஹெனான் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த பாட்டில்களில் மிக அதிகஅளவு பாக்டீரியாக்களும், விரைவான நுண்ணுயிர் வளர்ச்சிக்கான சாத்தியமும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு