தெலங்கானாவில் விநோதம் 15 செ.மீ நீளமுள்ள வாலுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்

திருமலை: தெலங்கானாவில் 15 செ.மீ நீளமுள்ள வாலுடன் குழந்தை பிறந்தது. இந்த வாலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பீபிநகரில் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் பெண் ஒருவர் வந்தார். அந்த பெண்ணுக்கு 8 மாதங்கள் முன்பு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது குழந்தைக்கு சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள வால் இருப்பதைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். வாலுடன் ஆண் குழந்தை பிறந்தது மருத்துவமனையில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த வாலால் குழந்தைக்கு வருங்காலத்தில் சிரமம் ஏற்படும் என குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் வாலுடன் பிறந்த குழந்தையை எய்ம்ஸ் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கடந்த ஜனவரியில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வாலை அகற்றினர். தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு, நரம்பியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து எய்ம்ஸ் டாக்டர்கள் கூறியதாவது: அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை 5 நாட்கள் உள்நோயாளியாக டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது அசாதாரணமான வளர்ச்சி. முதுகுத்தண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுவரை உலகில் வாலுடன் 40 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் வாலுடன் பிறந்த ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபின் நரம்பியல் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Related posts

குற்றவாளிகள் தப்பக் கூடாது; பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்: 2 பேர் கைது

காவலர்களை தாக்கிய போதை வாலிபர்கள்