குழந்தைக்கு பெயர் வைத்தல்

குழந்தை பிறந்து அடுத்து செய்ய வேண்டியது பெயர் வைத்தல். நாமகரணம் என்று சொல்வார்கள். இது பொதுவாக குழந்தை பிறந்த 11-வது நாள் செய்ய வேண்டிய, ஐந்தாவது சடங்கு. பிறந்த குழந்தைக்கு பெயர் இடுவது இதன் நோக்கம். குலதெய்வத்தின் பெயர், ரிஷியின் பெயர், குல முன்னோர்கள் பெயர் அல்லது நட்சத்திரத்தைக் கொண்டு பெயர் என வைக்கலாம். அழைப்பதற்கு இனிமையாகவும், இயன்றளவு சுருக்கமாகவும், அர்த்தமுள்ளதாகவும் பெயர் வைக்க வேண்டும்.

பழைய காலங்களில் ஒரு முறை உண்டு. பெரும்பாலும் தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைத்தார்கள். சந்ததி சங்கிலித் தொடரில் பெயர் வரிசையாகவும், எளிதாகவும் நினைவு கொள்வதற்காக இப்படி வைத்தார்கள். நகரத்தார் மரபில் இன்றும் இப்படி பெயர் சூட்டும் பழக்கம் உண்டு. இறைவனுடைய பெயரை வைப்பதில் என்ன புண்ணியம் தெரியுமா? குழந்தையைப் பெயர் சொல்லி அழைக்கும் போது இறைவனுடைய பெயரையும் அழைத்த புண்ணியம் கிடைக்கும்.

நம் வாழ்நாளில் எத்தனை தரம், அந்தக் குழந்தையை பெயர் சொல்லி அழைத்து இருப்போமா, அத்தனை தரம் இறைவன் நாமாவை ஜெபித்த புண்ணியம் ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் நம்பினர். இதற்கு உதாரணமாக அஜாமிளன் கதை சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், அஜாமிளன் என்ற ஒருவன் இருந்தான்.

நல்ல குடும்பத்தில் பிறந்த அவன், சாந்தமாகவும், வேத சாஸ்திரங்களை நன்கு அறிந்தவனாகவும், தூய்மையானவனாகவும் இருந்தான். ஒரு நாள், தந்தையின் வேண்டு கோளின் பேரில், அஜாமிளன் பழங்கள், பூக்கள் மற்றும் புற்களை சேகரிக்க காட்டுக்குச் சென்றான். வீட்டிற்கு செல்லும் வழியில், அஜாமிளன் ஒரு விலைமாதைக் கண்டு, உள்ளத்தில் இருந்த காம ஆசையால் நல்லறிவை இழந்து, அவளோடு வாழத் தொடங்கினான். ஊதாரித்தனமாக வாழ்ந்து, பிறரைத் துன்புறுத்தியும், ஏமாற்றியும், சூதாட்டத்திலும், திருட்டுத்தனத்திலும் தன் குடும்பத்தை நடத்தி வந்தான்.

இந்த வாழ்க்கையில் பத்து மகன்களைப் பெற்றான். தெரிந்தோ தெரியாமலோ இளைய மகனுக்கு “நாராயணா” என்ற பெயர் சூட்டினான். அந்த குழந்தையின் மீது அன்பு அதிகம். `நாராயண.. நாராயண..’ என்று நொடிக்கு நூறு தடவை கூப்பிடுவான். அசல் நாராயணனைக் குறிப்பிடவில்லை என்றாலும், நாராயணனின் புனித நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அஜாமிளன் தூய்மையடைந்தான்.

மரண நேரம் நெருங்கியதும், அவன் தன் மகன் நாராயணனைப் பற்றி மட்டுமே நினைக்கத் தொடங்கினான். இறக்கும் நேரத்தில், அஜாமிளன் மூன்று யம தூதர்களைக் கண்டு நடுங்கினான். துணைக்காக சத்தமாக, கண்ணீருடன் குழந்தையின் பெயரை “நாராயணா!” என்று அழைத்தான். உடனே, விஷ்ணுதூதர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். முரடனான அஜாமிளனின் வாயிலிருந்து புனிதப் பெயரைக் கேட்டனர். விஷ்ணுதூதர்கள், யமதூதர்களை விரட்டிவிட்டு அவனை நரக வாழ்க்கையில் நுழைவதில் இருந்து உடனடியாக விமோசனம் கொடுத்தனர்.

ஒரு குறிப்பிட்ட மருந்தின் வீரியத்தை அறியாத ஒருவர், அந்த மருந்தை உட்கொண்டால், அது அவருக்குத் தெரியாமலேயே செயல்படும், ஏனெனில் மருந்தின் வீரியம் நோயாளியின் புரிதலைப் பொறுத்தது அல்ல. அதுபோலவே, இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் மதிப்பு தெரியாவிட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் ஜபித்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை வைப்பது நல்லது. பெரியாழ்வார் எப்படி பெயர் வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு பாசுரம் அல்ல, ஒரு பதிகம் பாடியிருக்கிறார். அதில் உள்ள பாடல்கள், வைணவ மரபை ஒட்டி இருந்தாலும், மற்ற வழிபாடு, மரபு, சடங்குகளுக்குரியவர், இதன் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையோ அல்லது குலதெய்வத்தின் பெயரையோ வைக்கலாம்.

ஏற்கனவே தாத்தாவுக்கும் சாமி பெயரையே வைத்திருப்பார்கள் என்பதால், அதே பெயரை வைப்பதால் தாத்தா பெயர் வைத்த மாதிரியும் ஆயிற்று, சாமி பெயரை வைத்த மாதிரியும் ஆயிற்று. பெரியாழ்வார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். முதல் பாசுரம் இது.

காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையி னால்அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ
நாயகன் நாரணன் தம்அன்னைநர
கம்புகாள்.

உலகத்தில் பலர் தம்மக்களுக்கு இந்திரன், சந்திரன், குபேரன் என்றிவை போன்ற பெயர்களை இடுவதும் – நாகரீகமாக அழைக்க அர்த்தமற்ற பெயர்களை இடுவதும் எதற்காக? என்ன நன்மை? அந்த பெயர் அவனுக்கோ, உங்களுக்கோ என்ன நன்மை செய்துவிடும்? என்னமோ ஒரு தற்காலிக ஆசைக்கு அப்பெயர்களை இடுமவர்கள், ஞானமில்லாதவர்கள்.

அவர்கள் இடும்பெயர்கள், அவர்களுடைய ஆத்ம வாழ்வுக்கு தீங்கு விளைக்கத்தக்கவை. ஆதலால், அவற்றை ஒழித்து அப்பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமங்களை இட்டால், அவர்களைப் பெற்ற தாய் தந்தையர் நமன் தமர் (யம தூதர்கள்) கையிலகப்பட்டு நலிவுபடாமல் உய்ந்து போவார்கள். பெற்ற அன்னையும், தந்தையும் நரகம் புகாதிருக்க பகவானுடைய அருமையான பெயர்களை இடுங்கள்.

இதில் சிலர் கேட்பது உண்டு. ‘‘ஐயா, பெரும்பாலான இறைவன் நாமங்கள் வடமொழியில் அல்லவா இருக்கிறது. நான் தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்று கொண்டவன். தமிழ் மொழியில் நல்ல பெயர்களைச் சொல்லுங்கள். அப்பெயர்களை எங்கே தேடுவது?’’ என்பார்கள். உண்மையில், ஆழ்வார்கள் அருந்தமிழை வளர்த்தவர்கள். நாயன்மார்களும் அப்படியே. அவர்கள் சொல்லாத தமிழ்ப் பெயர்கள் எதுவும் இல்லை. எத்தனை அழகான தமிழ்ப் பெயர்கள் நம்முடைய ஆழ்வார்கள் பாசுரங்களிலும், தேவார திருவாசகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா?

ஸ்ரீமதி என்கிற பெயர் உங்களுக்கு வடமொழி பெயராகத் தெரிந்தால், அறிவுச் செல்வி என்று வைக்கலாமே. ஸ்ரீனிவாசன் பெயர் வேண்டாம் என்றால் அதே பொருளில் திருவாளன், திருவாழன் என்று, அழகான தமிழ்ப் பெயரை வைக்கலாமே. பங்ஜகவல்லி என்கிற பெயர் வடமொழியாகத் தெரிந்தால், தாமரைச் செல்வி என்று வைக்கலாமே, அல்லது பங்கயவல்லி என்று வைக்கலாம். ஆண்டாள் என்பது எத்தனை அழகான பெயர். மீனாட்சி என்பது அற்புதமான பெயர். தமிழில் மீன் விழியாள் என்று வைக்கலாம்.

இன்னும் கயல்விழி, வேல்விழி, அமுதன், கண்ணன், கந்தன், முருகன், குமரன், எழிலன் என்று ஆயிரம் பெயர்கள் கொட்டிக்கிடக்கின்றன. வடமொழியிலும் வைக்கலாம் என்று நினைப்பவர்கள், ஆண்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருந்தும், பெண்களுக்கு லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்தும் எண்ணற்ற பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். சிலர் வடமொழி தெரியாமல், தவறாக மொழி பெயர்க்கிறார்கள். ப்ருத்வி என்றால் பூமி அன்னை. சிலர் மண்ணாங்கட்டி என்று மொழி பெயர்கிறார்கள்.

மானிட சாதியில் தோன்றிற்றுஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட் டால் மறு மைக்கில்லை
வானுடை மாதவா கோவிந் தாஎன்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

இந்தப் பிறவி கிடைத்தற்கு அரிய பிறவி. காரணம், இந்த மனித பிறவிதான் அடுத்த உயர்ந்த பிறவியைத் தருவதற்கோ, அல்லது தாழ்ந்த பிறவி தருவதற்கோ காரணமாக இருக்கிறது. (வினைகளின் அடிப்படையில்) இந்தப் மனிதப் பிறவியில் பிறந்தவர்கள் முறையாக வாழ்ந்தால்தான் அவர்கள் அடுத்த நிலையான தெய்வ நிலைக்கு அடைய முடியும் என்பதை,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

அப்படி இந்த மண்ணில், மானிட சாதியில் பிறந்துவிட்டோம். குறைந்தபட்சம் பெயராவது நம்மைவிட மேலே இருக்கக்கூடிய தெய்வத்தின் பெயரை வைக்கலாமே. அப்படி வைக்காவிட்டால், இம்மைப் பலன்கள் கிடைத்தாலும் மறுமைப் பலன்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. நீங்கள் நல்ல பெயரை வைப்பதற்கு மிகவும் யோசிக்காதீர்கள். இறைவன் பெயரை வைத்துவிடுங்கள். அப்படி வைத்துவிட்டால், அது நல்ல பெயராகத்தான் இருக்கும். அது உங்களுக்கும் நல்லது. உங்கள் குழந்தைக்கும் நல்லது.

தொகுப்பு: தேஜஸ்வி

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!