மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை நடமாட்டம்:பொது மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: சமயபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள பாகுபலி யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஓடந்துறை, குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டுள்ள பாகுபலி யானையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் – வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையை சாவகாசமாக கடந்து சென்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘திடகாத்திரமான உடல் அமைப்புடன், கூர்மையான தந்தங்களை கொண்ட ஒற்றைக்காட்டு யானைக்கு தாங்கள் பாகுபலி என பெயரிட்டு அழைக்கிறோம்.

கடந்த 2 மாதங்களாக இந்த யானை அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவும், பாகுபலியின் நடமாடத்தை கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன. மேலும், இந்த யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்தும் வகையில், கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன.

ஆனால், வனத்துறையினரின் இந்த முயற்சி பலனளிக்காமல் போனது. தற்போது பாகுபலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் பாகுபலியை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது