அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், மலையை சுற்றி கிரிவலம் வந்து மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். சித்திரை தேர் திருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.மலை உச்சிக்கு முதியவர்கள், சிறுவர்கள் ஏறி செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் ரோப் கார்
வசதி ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எம்எல்ஏ மாணிக்கம் சட்டப்பேரவையில் ரோப் கார் திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டுமென பேசினார்.

இதன் எதிரொலியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்ததுடன் ரோப் கார் திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்தார். இதைதொடர்ந்து ரூ.9.10 கோடியில் பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூலை 24ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரோப் கார் திட்டத்தை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கடந்த ஜூலை 25ம் தேதி பலத்த காற்று அடித்ததால் ரோப் கார் பழுதடைந்தது. இதனால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் தொழில்நுட்ப குழுவினர் வந்து பழுதை சரி செய்தனர். இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் விசாரணை திருமகள் தலைமையில் ஆய்வு பணி நடந்தது. பின்னர் பழுது முழுமையாக சரி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மீண்டும் கடந்த 24ம் தேதி முதல் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்பட்டது.

மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்வதற்கு ரூ.50, மீண்டும் மலை உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு வருவதற்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரோப் கார் சேவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப் கார் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, காற்று நின்ற பின் மீண்டும் இயக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் எவ்வித அச்சமின்றி பக்தர்கள் ரோப் காரில் சென்று வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24ம் தேதி 119 பேரும், 25ம் தேதி 119 பேரும், 26ம் தேதி 250 பேரும், 27ம் தேதி 341 பேரும், நேற்று (28ம் தேதி) 401 பேரும் ரோப் காரில் பயணம் செய்துள்ளனர். கடந்த 5 நாட்களாக ஒட்டு மொத்தமாக 1230 பேர் ரோப் காரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கோயிலுக்கு ரூ.61,500 வசூல் கிடைத்துள்ளது.

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்