ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : ஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தேனிலவு தம்பதியரின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாட்கள், ஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாகவும், கர்நாடகாவில் தசரா பண்டிகை விடுமுறை காரணமாகவும் ஊட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ், காட்டேஜ்களில் அறைகள் அனைத்தும் செவ்வாய்கிழமை வரை நிரம்பியுள்ளன. சுற்றுலா பயணிகள் வருகையால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்டவைகள் களைகட்டின. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனிடையே ஞாயிற்றுகிழமை விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி-குன்னூர் சாலை, கூடலூர் சாலை, தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கூடிய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. நகரில் கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, பூங்கா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பகலில் வெயிலான காலநிலை நிலவிய நிலையில், அதனை அனுபவித்த படியே சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர். இதனிடையே நேற்று சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முதுமலை, சூட்டிங்மட்டம், அவலாஞ்சி, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மதியத்திற்கு பின் மேகமூட்டமான காலநிலை நிலவியது.

இருந்தபோதும் அதனை அனுபவித்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர். இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி என இரு நாட்கள் விடுமுறை உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு