கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த விலை மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிப்பு: பிரியங்கா காந்தி, அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

அயோத்தி: கடந்த 7 ஆண்டுகளில் மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிக்கப்படுவதாக பிரியங்கா காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, அந்நகரின் ரியல் எஸ்டேட் துறை கொள்ளை லாபத்தை சம்பாதித்து வருகிறது. அயோத்தியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூட, நிலங்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த நிலபேரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அயோத்தியில் இருக்கும் நிலங்களை, வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாங்கியும் விற்றும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.

மாநில பாஜக அரசின் முடிவு உள்ளூர் மக்களுக்கு எதிரானது. இது அவர்களுக்கான பொருளாதார சதி. பல கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடிகள் நடந்துள்ளன. இங்கு நிலம் வாங்கப்படவில்லை; மாறாக நில மாஃபியாவால் அபகரிக்கப்பட்டு வருகிறது). அயோத்தி-பைசாபாத் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்குவது, அவர்களின் நிலத்தை அபகரிக்கும் செயலாகும். அயோத்தியில் வளர்ச்சி என்று பிரசாரம் செய்யும் அரசு, நில மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘சாமானிய மக்களுக்கு கோதுமை மாவு, பருப்புகளின் விலை தெரியும். ஆனால் மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் அயோத்தி நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவசேனா (உத்தவ்) தலைவரான பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட பதிவில், ‘பாஜகவைப் பொறுத்தவரை, ராமர் மீதான பக்தியால் எதனையும் செய்வதில்லை. மாறாக அவர்களின் வியாபாரம் தான் முக்கியமாக உள்ளது. அதனால்தான் அவர்களுக்கு தேர்தல் முடிவின் மூலம் ராமர் தகுந்த பாடம் புகட்டி உள்ளார்’ என்று கூறியுள்ளார். இவ்வாறாக அயோத்தியில் நடக்கும் நிலம் மோசடிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்வு

ஆகஸ்ட் 01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 6ம் தேதி வரை மழை நீடிக்கும்