அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர், சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் : ராகுலின் பேச்சால் கடுப்பான மோடி!!

டெல்லி : மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,”உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, மோடியோ அல்ல.சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர்.,”என்றார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுனர். எழுந்து நின்று பேசிய மோடி, “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,”என்று தெரிவித்தார். மக்களைவையில் ராகுல்காந்தியை பேச விடாமல் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி – பிரதமர் மோடி, அமித் ஷா நேருக்கு நேர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு எழுந்து பிரதமர் மோடி பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும்.

ராகுல் பேச்சின் போது குறுக்கிட்டு பேசிய அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சியில்தான் டெல்லியில் சீக்கியர்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் என்று அவசரநிலை மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதலை மேற்கோள்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,”இந்துக்கள் என்பவர்கள் அமைதியை விரும்புவர்கள், வன்முறையில் ஈடுபடாதவர்கள்; ஆனால் பாஜகவினர் அதற்கு நேர்மாறாக உள்ளனர். இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை; ஆனால் பாஜக 24 மணி நேரமும் வெறுப்பையே பரப்பி வருகிறது. அயோத்தி பற்றி பேசியவுடன் மைக் ஏன் அணைக்கப்பட்டது ஏன்?. ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு; ஆனால் அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை.

அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள், ராமர் கோயில் விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டன. மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. வாரணாசிக்கு பதில் பைசாபாத்தில் போட்டியிட்டிருந்தால் மோடி தோற்றிருப்பார். அவைக்கு வரும்போது என்னைப் பார்த்து மோடி சிரிப்பது கூட இல்லை. மோடிக்கு பயந்து பாஜகவினர் எனக்கு வணக்கம் கூட வைப்பதில்லை,”என்று தெரிவித்தார். மேலும் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்த சமாஜ்வாதி எம்.பி. அவதேஷுக்கு ராகுல் காந்தி அவையிலேயே கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே ராகுலின் பேச்சுக்கு 2வது முறையாக எழுந்து நின்று பேசிய பிரதமர் மோடி,” இங்கு யார் என்ன பேசினாலும் நான் அதை எதிர்கொள் தயார்,”என்று தெரிவித்தார்.

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு