அயனமும் சயனமும் தருவது மஹாயோகம்…

வாழ்வில் அயனம் என்ற பயணங்களும் சயனங்கள் என்ற தூக்கமும் ஒரு நிறைவைத் தருகின்றன என்றால் மிகையில்லை. கடந்துபோகும் காலமும் சம்பவங்களும் ஏதோ ஒன்றை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அயனம் என்பது பயணத்தையும் சயனம் என்பது தூக்கத்தையும் குறிப்பதாகும். துக்கங்களை கலைக்க பயணத்தையும் களைப்பை கலைக்க தூக்கத்தையும் உயிரினங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தூங்க முடியாத மனிதனையும், துக்கங்களை தொலைக்க முடியாத மனிதர்களையும் நாம் காண்கிறோம். இவ்வாறு ஏன் நிகழ்கிறது என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும் விவரங்களையும் ஜோதிடத்துடன் தொடர்பு கொண்டு விரிவாகக் காண்போம்.

சயனம் என்ற தூக்கத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?

ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவகமும் ஒவ்வொரு ராசிக் கட்டத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த ராசிக் கட்டத்தோடு தொடர்புடைய கிரகங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆறாம் பாவகத்திற்கு (6ம்) சப்தமஸ்தானமாக பன்னிரெண்டாம் (12ம்) பாவகம் வருகிறது. தூக்கம் கெட்டால் நோய் உண்டாகும் என்பது நிச்சயம். ஒரு மனிதன் தூக்கமின்றி இருந்தால், துயரத்திற்கு சிக்கிக் கொண்ட மனிதனாக இருக்கிறான். இந்த துயரம், மனஉளைச்சல், இழப்பு, தாங்கமுடியாத வேதனை, நோய் என்ற பலவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. மருத்துவர்கள்கூட மருத்துவத்தில், உங்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறதா? என்ற கேள்வியை கேட்பார்கள். தூக்கத்தில்தான் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து வேலை செய்யும். இயற்கையில் மனித உடல் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் தகவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு நாளும் மனிதன் தூங்கும் நேரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களை உடலும் மனமும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்.

தூங்கும் நேரத்தில்தான் குழந்தைகள் வளர்ச்சியடைகிறார்கள் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அப்படிப்பட்ட தூக்கத்தை தள்ளிப் போடுவது நமக்கு நாமே நோயை வரவழைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சியில், ஐ.டி துறையில் பணியாற்றும் பலர் வெவ்வேறு நாடுகளுக்கு பணி செய்வதற்காக, இரவு நேரத்தில் பணி செய்கின்றனர். அதனால், அவர்கள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் ஜீரண குறைபாடுகளால், உழைத்து சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்கு செலவழித்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஜோதிடத்தில் அயன, சயன ஸ்தானம் என்பது பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்தை குறிக்கிறது. இந்த பாவகத்தின் அடிப்படையிலேயே ஒருவரின் வெளிநாடு பயணம், முக்தி, உறக்கம் மற்றும் கனவுகள் என இன்னும் ஏராளமான விஷயங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறது.

12ம் பாவகத்தில் இருக்கும் கிரகங்கள் என்ன சொல்கிறது?

♦ 12ம் பாவகத்தில் சனி இருந்தால், தூக்கம் தொலைத்தவனாகவும், குறைந்த நேரமே தூங்குபவனாகவும், தூக்கத்தில் வரும் கனவில் அசுப உருவங்களே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எறுமை மாடுகள் வருவது போன்றும் கனவுகள் வரலாம்.
♦ 12ம் பாவகத்தில் செவ்வாய் மற்றும் சனி இருப்பதால் சண்டை போடுவது போல் கனவுகளும், தூங்கும் இடங்களில் அடிக்கடி சப்தங்கள் வரும் சூழ்நிலைகளில் இவர்கள் தூங்குவார்கள். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு பின் புறம் ரயில் செல்லும் பாதையாகவே இருக்கலாம். அதிக குறட்டைவிடும் தன்மையுடையவர்களாக இருப்பர். உபய ராசியாக (மிதுனம், துலாம், கும்பம்) இருந்தால் குறட்டை இன்னும் அதிக சப்தத்துடன் இருக்கும்.
♦ தூக்கங்களும் கனவுகளும் கோட்சாரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு தக்கவாறு மாறுபடுகிறது. ராகு-12ம் பாவகத்தில் இருக்கும் பொழுது தூக்கம் நீண்டதாகவும், அசுப கிரகங்களின் பார்வை ராகுவின் மீது விழும் பட்சத்தில், நீங்கள் உறங்கும் இடத்தில் விஷ பூச்சிகள் கடந்து செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சர்ப்பத்தை பற்றி கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
♦ சுபகிரகங்கள் வியாழன், சுக்கிரன், புதன் போன்றவை 12ம் இடத்தில் வலுப்பெற்றிருந்தால், தூக்கம் ஆனந்தமாகவும், அதிக இளைப்பாறுதலையும், புத்துணர்ச்சியையும் தருவதாக இருக்கும்.
♦ 12ம் பாவகத்தில் சந்திரன் மற்றும் சனி இருக்கும் பட்சத்தில், சினிமாவில் வந்த காட்சிகள் எல்லாம் கனவுகளாய் வருவதற்கு வாய்ப்புண்டு. கனவின் காட்சிகளை வைத்து புதுக்கதையை உருவாக்கி, படமெடுக்கும் வாய்ப்புகள் உண்டாகலாம்.
♦ சிலருக்கு கனவில் முன்னோர்கள் வருவது, வீட்டில் இறந்து போன முன்னோர்களுக்கு முறையாக திதி கொடுக்காததையும், அவர்கள் வழி வந்தவர்கள் அவர்களை நினைக்காமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
♦ 12ம் இடத்தில் செவ்வாய் இருந்துவலிமையாக ஆட்சிப் பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருப்பவர்கள், தூங்கும் போது அதிகம் உருளுவார்கள். படுக்கை ஓரிடத்திலும் இவர்கள் ஓரிடத்திலும் உறங்கிக் கொண்டிருப்பர்.

சயன ஸ்தானத்தில் உள்ள கிரகங்களுக்கு என்ன பரிகாரம்?

♦ சூரியன் இருந்தால் கோதுமை – ஞாயிறு, செவ்வாய் இருந்தால் துவரை – செவ்வாய் – சனி இருந்தால் துவரை மற்றும் எள் சேர்த்து – செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை, ராகு இருந்தால் கருப்பு நிற உளுந்து, கேது இருந்தால் கொள்ளு ஆகியனவற்றை படுக்கும் படுக்கைக்கு அடியில் வைத்து உறங்கவும். காலையில் எழுந்த பின்பு படுக்கையின் அடியில் வைத்த தானியத்தை மூன்றுமுறை தலை இடது வலதாக சுற்றி அருகில் ஓடிக் கொண்டு இருக்கின்ற நதியில் அல்லது கடலில் போட்டுவிடவும். அந்த கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
♦ சயன நிலையில் உள்ள சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். ஆந்திராவில் இருக்கும் சுருட்டப் பள்ளி, பள்ளிகொண்ட ஈஸ்வரர்.
♦ படுத்தநிலையில் உள்ள அம்மனை வழிபடுதல் சிறப்பு தரும். மாசாணி அம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், நிறைமாத கர்ப்பிணியாக சயனத்தில் அருள்பாலிக்கும் புட்லூர் அங்காளம்மன்.
♦ சயனப் பெருமாளை வழிபடுதல் சிறப்பு தரும். ரெங்கநாதரை வழிபடுவது சிறப்பு.
♦ நிஷ்டையில் உள்ள குருவை வழிபடுதல் சிறப்பு.
♦ மகாராஷ்டிராவில் உள்ள லோனாரில் மோத்தா அனுமன் சயன நிலையில் உள்ளார். இவரை வழிபடுவதும் சிறப்பு. இவரது காலடியில் சனிபகவான் இருப்பது இன்னும் சிறப்பாகும்.

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்