விழிப்புணர்வு தேவை

குழந்தை திருமணங்களை தடுக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும், பல மாநிலங்களில் குழந்தை திருமண அவலங்கள் நடந்தேறி வருகின்றன. பால்ய விவாகம் என்ற முறை முன்பு இருந்துள்ளது. அப்போது திருமணம் குறித்த எந்த தெளிவும், அறிவும் இல்லாத பெண் பிள்ளைக்கு மணமுடித்துவைப்பார்கள். பிறகு அப்பெண் உரிய வயது வரும் வரை பெற்றோரின் பராமரிப்பிலேயே வளர்வாள். பின்னர் கணவன் வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். பெண்களின் சுதந்திரம், உணர்வுகள், அனுபவம், அறிவு, படிப்பு, சுயமரியாதை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து 18 வயது நிறைவடைந்த பிறகு தான் பெண்கள் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதி வழங்கியது.

இதற்காக குழந்தை திருமண தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை மீறி பல மாநிலங்களில் அதிலும் குறிப்பாக கிராமங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிகஅளவு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகள் நன்கு படித்து தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டத்தில் உள்ளது.

ஆனால் கிராமப்பகுதிகளில் பெரும்பாலான பெற்ேறார்கள் குடும்ப கவுரவம், சொத்து, வரதட்சணை, சொந்தம் விட்டுபோக கூடாது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கூட கவலைப்படாமல் திருமணத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். சில இடங்களில் வயது வித்தியாசத்தை கூட பார்க்காமல் திருமணம் நடத்துகிறார்கள். இப்படி சட்டத்தை மீறி நடந்து கொள்பவர்களை தண்டிப்பதால் மட்டும் இதை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு தேவை பெற்றோருக்கும், பெண் பிள்ளைகளுக்கும் முறையான கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வு. இதை ஒவ்வொரு மாநில அரசும் தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு ஒரு குழுவை அமைத்து கிராமங்களில், மலைவாழ் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு தெருக்கூத்து, நாடகம், தெருமுனை பிரசாரம் ஆகியவற்றால் மக்களின் மனதில் குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தாசில்தார், மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை கூடுதல் பொறுப்பாக ஏன் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தண்டனை வழங்கி இப்பழக்கத்தை சீர்திருத்திவிட முடியாது. முறையான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பண்படாத பெண், ஒரு குழந்தைக்கு தாயாகி சமூகத்தை எதிர்கொள்வதில் பல பிரச்னைகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்த அரசுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் மிக அவசியம் என்று உணர வேண்டும்.

Related posts

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மறுப்பு

மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!