குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

*காவல்துறை சார்பில் நடந்தது

ஆரணி : குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது. இதையடுத்து சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆரணி டவுன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மகேந்திரன், திலிப்குமார், சக்திவேல், மோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரேணுகா வரவேற்றார். இதில், ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது, மாணவர்கள் நிகழ்காலம், எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது.

மேலும், தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாய் அமையும். இளம் பருவத்தில் எந்த பழக்கத்திற்கும் அடிமையாகிவிடக் கூடாது. அதேபோல், நாளுக்கு நாள் மாணவர்கள் சிறுவயதில் போதை, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையும், எதிர்காலத்தையும் அழித்துக் கொள்ள வேண்டாம். அதேபோல், பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் 18 வயதுக்குள்ள சிறுமிகளுக்கு திருமணம் நடப்பது குறித்து தெரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளி அருகில் போதை பொருட்கள் விற்பது, தங்களுடன் படிக்கும் மாணவர்கள் போதை பழக்கத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, போக்சோ சட்டம், குழந்தை திருமணங்கள், முதியோர்களை பாதுகாப்பது, போதை பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் சிறுதானியங்கள் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர்கள் வசந்தா, தாமரைச்செல்லி ஆகியோர் தலைமையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி சார்பதிவாளர் அலுவலம், நீதிமன்ற வளாகம், தாலுகா அலுவலகம், நகர காவல்நிலையம் வழியாக மீண்டும் ஆண்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து பேரணி முடித்துக் கொண்டனர்.

அப்போது, பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்நி சிறுதானியங்கள் பயன்பாடுகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி