அரசு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளில் ஹாலோ பிளாக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

*பொதுமக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசின் கான்கிரீட் வீடுகளை செங்கல்லை பயன்படுத்தி கட்ட வேண்டும் என்றும் ஹாலோ பிளாக் பயன்படுத்தி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழும் கான்கிரீட் வீடுகள் கட்டும்பணி பரவலாக நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

சிமென்ட், செங்கல், கருங்கல் ஜல்லிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அரசின் வீடு கட்டுவதற்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதே நீளம் மற்றும் அகலத்தில் அரசின் சார்பில் சமையல் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கூடம் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால் அதே அளவில் அரசின் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு வெறும் ரூ.2.5 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வீடு கட்டும் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளை கட்டிக் கொள்வதற்கு மிகுந்த சிரமம் இருந்து வருவதால் இடைத்தரகர்கள் மூலம் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் வீடு கட்டி கொடுப்பவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ஹாலோ பிளாக் சிமென்ட் கான்கிரீட் கல்லை செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஹாலோ பிளாக் கற்கள் பயன்படுத்தி கட்டினால் சுற்றுச்சுவர்கள் வலிமை இழந்து காணப்படுவதாக பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு ஏற்றவாறு ஹாலோ பிளாக் கல்லை பயன்படுத்தி மட்டுமே வீடு கட்ட கூடிய சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த வீடு கட்டும் பயனாளிகள் கூறுகையில், செங்கல்லின் விலை ஏற்றத்தினால் ஹாலோ பிளாக் பயன்படுத்தப்படுகிறது. அரசின் வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை மிக மிக குறைவாக உள்ளது. இந்தக் குறைந்த அளவுத் தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டின் பாதி அளவு கூட கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

எனவே அரசின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஹாலோ பிளாக் பதிலாக செங்கல்லை பயன்படுத்தி வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல வீடு கட்டும் பயனாளிகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு வீடு கட்டுவதற்கு தொகையை ரூ.7.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஹாலோ பிளாக் வைத்து கட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு வீடு கட்டுவோர் சார்பில் கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்