விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் சிகிச்சை பலன் இன்றியோ கூட்ட நெரிசலிலோ உயிரிழக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரும் கூட்ட நெரிசலில் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சாகச நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்திய விமானப்படை தமிழ்நாடு அரசிடம் என்னென்ன வசதிகள் கோரினார்களோ அதனை தலைமை செயலர் தலைமையில் 2 ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்து செய்து கொடுக்கப்பட்டது. அந்தவகையில், பல்வேறு மருத்துவக் குழுக்கள் அமைத்து 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பாராமெடிக்கல் குழுக்களையும் அமைத்திருந்தோம்.

அதேபோல் 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இந்திய விமானப்படை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 20 தீவிர சிகிச்சைக்குரிய படுக்கைகளும், ரத்த வங்கி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருந்தோம். இதுதவிர, 65 மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தனர். அதேபோல் ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என 4000-த்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை தயார் நிலையிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிகளிலும் இருக்க சுகாதாரத்துறை செய்து கொடுக்கப்பட்டன.

இந்திய விமானப்படை கேட்டதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டன. ஆனால், அதற்கும்மேல் மெரினாவில் மக்கள் படையெடுத்து வந்தனர். அதேநேரத்தில் வெயிலின் தாக்கமும் கடுமையாக இருந்தன. நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்கள் குடையுடன் வர வேண்டும், தண்ணீருடன் வர வேண்டும், கண்ணாடி, தொப்பி அணிந்து வர வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும் இறப்பு சம்பவம் உண்மையில் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். 5 நபர்களும் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
சிகிச்சை பலன் இன்றியோ, கூட்ட நெரிசலிலோ யாரும் உயிரிழக்கவில்லை. ஒட்டுமொத்தமாக வெயில் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆகும். இதில் புறநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 93 ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை