ஆவணி முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று பால் ஊற்றி வழிபாடு

நாகர்கோவில்: ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர். நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள். இங்கு நாகராஜருக்கு தனி சன்னதி உள்ளது. சிவன், அனந்த கிருஷ்ணர், தர்ம சாஸ்தா, கன்னி விநாயகர், துர்க்கையம்மன், பாலமுருகன் சன்னதிகளும் உள்ளன.

நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ தினங்களாகும். அன்றைக்கு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். அதன் இன்று (18ம்தேதி) ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையாகும். இதையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.

இவர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபாடு செய்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் நாகருக்கு அபிஷேகங்கள் நடந்தன. காலை 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில் தனியாக கியூ செட் அமைக்கப்பட்டு இருந்தது.

ரூ.400க்கு சிறப்பு தரிசன டிக்கெட் வினியோகம் செய்தனர். இந்த டிக்கெட்டில் சென்றவர்களுக்கு 1 லிட்டர் பால் பாயாசம் சில்வர் பாத்திரத்தில் வழங்கப்பட்டது. மேலும் கோயில் பிரசாதம், தேங்காய், பழம் உள்ளிட்டவையும் வழங்கினர். ரூ. 150 கட்டணத்தில் ஒரு லிட்டர் பால் பாயாசம் (தனி கவரில்) மட்டும் வழங்கப்பட்டது.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்