ஆவடி அருகே ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணம் தயாரித்து விற்றவர் கைது

ஆவடி: ஆவடி அருகே ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சங்கர முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்(55). இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது இரண்டாவது மருமகன் மோகன் ராஜூவின் சொந்த ஊர், காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை என்பதால் பூந்தமல்லி அருகே நிலம் வாங்க இடம் தேடினேன். அப்போது, பூந்தமல்லியைச் சேர்ந்த நிலத்தரகர் கார்த்திக்(45) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அதன்படி, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரத்தில் எம்எம்டிஏ உரிமம் பெற்ற 1980 சதுர அடி நிலத்தை, சதுரடி ரூ.3300 என விலை பேசினேன். மேற்கூறிய சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் பொது அதிகாரம், ராமகிருஷ்ணன் என்பவரிடம் உள்ளது. இதனால் கார்த்திக் மற்றும் ராமகிருஷ்ணனிடம் ரூ.29.79 லட்சம் கொடுத்தேன். மீதமுள்ள பணத்தை நகை அடகு வைத்து, தெரிந்தவரிடம் கடன் வாங்கி, நிலத்தை பத்திர பதிவு செய்தேன். இந்நிலையில், நான் வாங்கிய நிலத்தில் பிரச்னை இருப்பதாக கூறி பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்தனர்.

அங்கு சென்று விசாரித்த போது, நிலத்தின் உரிமையாளர் சந்திரன் போல், ஆள்மாறாட்டம் செய்து என்னை ஏமாற்றியது தெரிந்தது. எனவே, என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், முக்கிய குற்றவாளியான கொரட்டூரைச் சேர்ந்த சரத்பாபு(36) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், சரத்பாபு, ஆவடியைச் சேர்ந்த நிலத்தரகருடன் கூட்டு சேர்ந்து, காலியான நிலங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி விவரங்கள் சேகரித்து பல ஆண்டுகளாக போலியான ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுவரை ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு