ஆவடியில் பயங்கரம் ரூ.25 ஆயிரம் கடன் தகராறில் வாலிபர் வெட்டி கொலை: 7 பேர் கைது

ஆவடி: ஆவடியில் ரூ.25 ஆயிரம் கடன் பிரச்னையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன் (27), கூலி வேலை செய்து வந்தார். இவர், கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கயல் (22) என்கிற திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணங்களாக பிரிந்து விட்டனர்.

இதனால், கடந்த ஒரு வாரமாக, காஜாமொய்தீன், ஆவடி நந்தவனம் மேட்டூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி (21) வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காஜா மொய்தீன் வீட்டில் 9 நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். போதை தலைக்கு ஏறியவுடன் காஜாமொய்தீன், கார்த்தி வாங்கிய 25 ஆயிரம் ரூபாய் குறித்து பேசி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜா மொய்தீன், கொலை செய்து விடுவேன் என கார்த்திகேயனை மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன கார்த்தி, தனது நண்பர்களை அழைத்து, காஜா மொய்தீனை கத்தி, பீர்பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை, கை, வயிற்று ஆகிய இடத்தில் வெட்டியும், தாக்கியும் கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25), பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற ராஜசேகரன் (25), லலித் (21), லோகேஷ் (25), அஜித் (20), செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (21), ஆவடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் ஆசிப், அவரது நண்பர் ஆகிய 9 பேரும் சேர்ந்து காஜா மொய்தீனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதில், 7 பேரை ஆவடி போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிப் மற்றும் அவரது நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு