ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி அருகே மீன் பண்ணை ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் சந்தேகத்தின்பேரில் ஊழியர்கள் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு ஜெயசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். மீன் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மீன் பண்ணையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (26) என்பவர் குடிசை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தார்.

இவர், நேற்று இரவு தன்னுடன் பணிபுரியும் கண்ண பிரான் (30) என்பவருடன் மது அருந்தியுள்ளார். கண்ணப்பிரான் மீன் பண்ணையில் தூங்க சென்ற நிலையில், மணிகண்டன் தூங்காமல் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் மீன் பண்ணை செல்லும் வழியில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீன் பண்ணை உரிமையாளர் தங்கராஜ், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டன் கொலை தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் உதவி ஆய்வாளர் பச்சமுத்து, சுரேஷ் மற்றும் தென்னவன் தலைமையிலான தனிப்படை போலீசார், சந்தேகத்தின் பேரில் மீன் பண்ணையில் பணியாற்றும் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு