ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்பத்தூர் அடுத்த பாடி, புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமுருகன் (25), ஆட்டோ டிரைவர். கடந்த 2019ம் ஆண்டு நண்பருடன் ஆட்டோவில் புதுக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மோகன் தரப்பினர் ஆட்டோவை வழிமறித்து அழகுமுருகனிடம் பணம் கேட்டுள்ளனர். அழகு முருகன் பணம் தர மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன், டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அழகு முருகனை சரமாரியாக வெட்டினர். இதில் அழகு முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான மோகன் (25), டேனியல் (23), மற்றும் 17 வயது சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்தார்.

பின்னர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் மோகன், டேனியல் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மோகனுக்கு ரூ.16 ஆயிரம், டேனியலுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். ஆயுள் தண்டனை பெற்ற இருவரும் ஏ கேட்டகிரி ரவுடிகள் என்பதும், கைது செய்யப்பட்ட இளம் சிறார்கள் 3 பேரில் ஒருவன் கொலை செய்யப்பட்ட நிலையில் மற்ற 2 பேர் மீதும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்