பார்வதிபுரத்தில் லோடு ஆட்டோ மோதி ரயில்வே கேட் சேதம்: சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள்

நாகர்கோவில்: பார்வதிபுரம் ரயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியதில் கேட் சேதமடைந்து, அந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது. பார்வதிபுரத்தில் இருந்து ஆலம்பாறை செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இன்று காலை சுமார் 8.55 மணியளவில், நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற ரயிலுக்காக பார்வதிபுரத்தில் உள்ள இந்த ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ டிரைவர், ரயில்வே கேட் கீழே இறங்குவதை பார்த்து ரயில் பாதையை கடப்பதற்காக வேகத்தை கூட்டி சென்றார். ஆனால், கேட் அதற்குள் கீழே இறங்கியது. இதனால் லோடு ஆட்டோவின் மேல் பகுதி கேட்டை சேதப்படுத்தி விட்டு, நிற்காமல் சென்று விட்டது.

இதனால், கேட்டை கேட்கீப்பர், இயந்திரம் மூலம் ஏற்றி இறக்க முடியாது என்பதால், கேட்டை சங்கிலி மூலம் பிணைத்து பூட்டினார். ரயில்கள் வரும்போது, அவசர அவசரமாக ஏற்றி இறக்க முடியாது, என்பதால், கேட் பூட்டப்பட்டு, அதில் நில் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், பல கி.மீ சுற்றி சென்று அவதியடைந்தனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்