பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது

பெரம்பூர்: பெரவள்ளூரில் பள்ளிக்கூட வாசலில் ஆட்டோவை நிறுத்திய தகராறில் கன்னத்தில் ஆங்கிலோ இந்தியன் ‘பளார்’ அறை விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். தன்னை ஆட்டோ டிரைவர் அசிங்கமாக திட்டியதால்தான் ஆத்திரத்தில் இப்படி செய்தேன் என விசாரணையில், கைதான ஆங்கிலோ இந்தியன் தெரிவித்துள்ளார். ராயபுரம் சிஜி காலனி 7வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (60). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு வாசுகி (55) என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

செல்வம் பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியில் லலிதா (55) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் செல்வம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் எஸ்ஆர்பி கோவில் தெரு, தெற்கு பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அருகே சவாரிக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோர்களும் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியனான ரெக்கார்டோ (36) என்பவர் தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனை அழைத்துச் செல்வதற்காக தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் செல்வம் ஆட்டோவை பள்ளியின் வாசல் அருகே நிறுத்தி வைத்திருந்தார். இதனை கண்ட ரெக்கார்டோ ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் செல்வம் தகாத வார்த்தைகளால் ரெக்கார்டோவை அசிங்கமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெக்கார்டோ, தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செல்வத்தின் கன்னத்தில் 3 முறை பளார்… பளார்… என தொடர்ந்து அறைந்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த செல்வம் மயக்கம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை பெரியார்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீசார் பெரியார் நகர் மருத்துவமனைக்குச் சென்று செல்வத்தின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெக்கார்டோவை கைது செய்து விசாரணை செய்ததில், செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் அவரை அடித்து விட்டதாகவும், அவர் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த செல்வம் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெக்கார்டோவை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு