இளைஞர்களை ராணுவத்திற்கு தயார்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி கிராமத்தைச் சேர்ந்த முப்பத்துமூன்று வயதாகும் தர்மராஜா. சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி அபர்ணா, 11 மாதப் பெண்குழந்தை பிரவீணா ஆகியோர் உள்ளனர். தருமராஜா, தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், காவலர் தேர்வுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாததால் அவரின் கனவு தோல்வியடைந்தது. தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்கிற மந்திரச்சொல் தருமராஜாவை மாற்றி யோசிக்கவைத்து மாற்றத்திற்கான வழியைக் காட்டியது.

தனக்குக் கிடைக்காத காவல்துறை பணியில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். தனது கிராமத்தில் படித்த ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களை அழைத்து உடற்பயிற்சி அளித்தார். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர், 100 மீட்டர் எனக் காவலர் தேர்வில் நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளையும் இளைஞர்களுக்கு அளித்தார். தற்போது, தமிழ்நாடு காவல்துறையில் 8 இளைஞர்களும், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையில் 8 இளைஞர்கள் என 16 இளைஞர்கள் நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனக்குக் கிடைக்காதது பிறருக்காவது கிடைக்க வேண்டும் என்ற சேவை உள்ளத்துடன் மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றி குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஏழை, எளிய மக்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும், தவறு செய்வோரைத் தட்டிக்கேட்டு தண்டிக்கும் உன்னதமான காவல்துறையின் மீது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. B.SC, B.P.Ed உடற்கல்வி முடித்துள்ளேன். தமிழ்நாடு காவலர் தேர்வுக்காகக் காத்திருந்தேன். ஆனால், 2011க்கு பிறகு காவலர் தேர்வு நடைபெறவில்லை. இதனால், காவலர் தேர்வில் பங்கேற்கும் வயதைக் கடந்துவிட்டதால், அதன்பிறகு நடந்த காவலர் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. இதனால், காவல்துறையில் பணியாற்றும் எனது நீண்டநாள் கனவு கானல் நீரானது. தென்காசியில் உள்ள செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன். விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும், சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டேன். மேலும், கல்யாண ஊர்வலம் நிகழ்ச்சிகளுக்கு டிரம்ஸ் வாசிக்கும் தொழிலுக்கும் போவேன். உடற்கல்வி படித்திருந்ததாலும் எங்களது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து காவல்துறை, ராணுவத்தில் பணியாற்றுவோர் மிகவும் குறைவு என்பதாலும் வறுமை நிலையில் உள்ள இளைஞர்களைக் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றும் வகையில் உடற்பயிற்சி அளிக்கலாம் என்று முடிவுசெய்தேன்.

தொடர்ந்து, இளைஞர்களுக்கு ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் எனக் காவல்துறைக்கான உடல் தகுதித் தேர்வில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முறைகளுக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். இதற்கு எங்கள் ஊரைச் சேர்ந்த தேரிகுமார் என்பவர் உறுதுணையாக இருந்தார். காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பயிற்சி அளித்தேன். பயிற்சிநேரம் போக ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்திவருகிறேன்’’ என்று தர்மராஜா இலவசமாக ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிந்தனை தோன்றியதற்கான காரணத்தைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘காவலர் தேர்வுக்குப் புத்தகத்தைப் படித்துவிட்டு முறையான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் நேரடியாக உடற்தகுதித் தேர்வுக்குச் செல்கின்றனர். இதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் இளைஞர்கள் பலரும் உடற்தகுதி, திறனறி தேர்வில் தோல்வி அடைகின்றனர். உடற்தகுதி மிகவும் முக்கியம். அதற்கான பயிற்சிகளை முறையாகவும், கடுமையாகவும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். அதனை நான் தீவிரமாகச் செயல்படுத்தி பயிற்சி அளித்ததில் 16 இளைஞர்கள் காவல் துறை, ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார் பெருமிதத்துடன்.

எங்கள் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றுவோர் மிகவும் குறைவு. அந்த நிலையை மாற்ற வேண்டும், என்பதன் காரணமாகப் படித்த ஏழை, எளிய இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறேன். காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் கோச்சிங் சென்டர்களில் இளைஞர்களை சேரச் சொல்வேன். தினமும் ஓட்டம், கயிறுஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல் பயிற்சி அளிப்பேன். வாரத்திற்கு ஒருமுறை உடற்தகுதித் தேர்வு நடத்துவேன். அதில், குறைந்த மதிப்பெண்கள் பெறுவோருக்குக் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் பயிற்சி அளிப்பேன். எங்கள் ஊரில் ஏழ்மை நிலையில் உள்ள படித்த இளைஞர்களை ராணுவம், காவல்துறை என அரசுப்பணியில் சேரச் செய்ய வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். எனக்குக் காவல் துறையில் வேலை கிடைக்காததற்கும் ஒரு காரணம் உள்ளது என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

காவல் துறையில் சேரப் பலரை உருவாக்கும் இடத்தில் கடவுள் என்னை வைத்துள்ளார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்த தருமராஜா மணி 5 ஆகப்போகுது பசங்க வந்திருப்பாங்க, பயிற்சி அளிக்கணும் என்று கூறியபடி, ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பயிற்சிக் களம் நோக்கிப் பயணித்தார் தருமராஜா. வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜா வருங்கால இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

Related posts

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!!

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை