ஆக.18ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார: அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று (25ம் தேதி) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது. இந்த மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதல்வர், ஆகஸ்ட் 18ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளார் என்று மீன்வளத்துறை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு