Monday, July 1, 2024
Home » ஆடி ஸ்பேஷல்: ஆடி மாதத்தின் 40 அற்புத சிறப்புகள்

ஆடி ஸ்பேஷல்: ஆடி மாதத்தின் 40 அற்புத சிறப்புகள்

by Kalaivani Saravanan

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். அதாவது சூரியன் தெற்கு பக்கமாக வலம் வரும்.

2. இந்த புண்ணிய கால கட்டத்தில் மக்கள் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பௌர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

You may also like

Leave a Comment

eighteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi