போதையில் காரை தாறுமாறாக ஓட்டி 15 வாகனங்கள் மீது மோதல் ‘சரக்கு சிட்டி’யை கதிகலங்க வைத்த சென்னை குடிமகன்களுக்கு ‘கவனிப்பு’

புதுச்சேரி: புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டி 15 வாகனங்களை இடித்துச்சென்ற சென்னை வாலிபர்கள் 5 பேரை பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்து ஆடைகளை உருவி தர்மஅடி கொடுத்தனர். சென்னையை சேர்ந்த 5 வாலிபர்கள் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு (சரக்கு சிட்டி) சுற்றுலா சென்றனர். கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று மதியம் அனைவரும் மது அருந்தினர். உணவு சாப்பிடுவதற்காக காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினர். நகரின் மையப்பகுதியில் நேரு வீதியின் எதிர்திசையில் நுழைந்தனர்.

இது ஒரு வழிப்பாதை என்பதால் அவ்வழியாக காரில் செல்ல வேண்டாம் என பலரும் எச்சரித்தனர். எனினும் அந்த வாலிபர்கள் காரை தாறுமாறாக ஓட்டினர். பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நிறுத்த முயலவே அவர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் கார் பறந்தது. சினிமாவில் வருவதுபோல எதிரே வந்த 15 வாகனங்கள் மற்றும் பொதுமக்களை இடித்து தள்ளியவாறு கார் வேகமாக சென்றது. குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து தரதரவென சில மீட்டர் தூரம் இழுத்து சென்றதால், பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். சில இளைஞர்கள், தங்களது வாகனத்தில், அந்த காரை விரட்டி சென்றனர். இப்படி 5 கிலோ மீட்டர் சென்றதும் கார் டயர் பஞ்சர் ஆனது.

அதையும் பொருட்படுத்தாமல் லாஸ்பேட்டை பகுதிக்குள் புகுந்து, விமானம் நிலைய பின்புறம் செல்லும் சாலையில் நிற்காமல் மேலும் 2 கி.மீ தூரம் காரை ஓட்டி சென்றனர். இதனால் கார் டயர் முழுவதும் பிய்ந்து தேய்ந்தது. டயர் முற்றிலுமாக பிய்ந்து போனதால், வெறும் ரிம்முடன் சென்ற கார் ஓடையில் பாய்ந்து நின்றது. பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் காரின் கண்ணாடி, மற்றும் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியில் இழுத்து, அவர்களது ஆடைகளை உருவி தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், காரை ஓட்டியது சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணையை சேர்ந்த சுனில் என்பதும் அவரது நண்பர்களான எபினேசர், தலீப், ஆஷிக், ஸ்ரீநாத் ஆகியோர் உடன்வந்ததும், சென்னையில் மெக்கானிக் வேலை செய்யும் இவர்கள் கடந்த 7ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து, அதிகளவு மது அருந்தி விட்டு ேபாதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்