பலாத்கார முயற்சியை மரியம் ரஷீதா தடுத்ததால் தான் இஸ்ரோ ரகசியங்களை கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது: சிபிஐ குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஓட்டல் அறையில் வைத்து மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதாவை முன்னாள் இன்ஸ்பெக்டர் விஜயன் பலாத்காரம் செய்ய முயற்சித்ததை தடுத்ததால் தான் இஸ்ரோ ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டு திருவனந்தபுரத்திலுள்ள விண்வெளி ஆய்வு மைய ரகசியங்களை ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட நாடுகளுக்கு கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா ஹசன் மற்றும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணன், சசிகுமாரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இது பொய் வழக்கு என தெரியவந்ததை தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சதி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. இதன்படி விசாரணை நடத்திய சிபிஐ, கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ், குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், திருவனந்தபுரம் முன்னாள் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட 18 பேர் மீது திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன் விவரம் வருமாறு: தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விஜயன் திருவனந்தபுரத்தில் ஒரு லாட்ஜில் சோதனை நடத்தினார். அப்போது ஒரு அறையில் தங்கியிருந்த மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதாவை அவர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் மரியம் ரஷீதா அதற்கு உடன்படவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் விண்வெளி ஆய்வு மையம் ரகசியங்களை கடத்தியதாக பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் டிஜிபிக்களான ஸ்ரீகுமார் மற்றும் ராஜீவன் ஆகியோர்தான் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

போலீஸ் நிலையத்தில் வைத்து நம்பி நாராயணன் கடுமையாக தாக்கப்பட்டார். ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று முன்னாள் ஐபி உதவி இயக்குனர் வினோத்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மரியம் ரஷீதா கைதானவுடன் பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கின. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.52 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

பாகிஸ்தானுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண் கைது