துப்பாக்கி முனையில் சிறுமியிடம் பலாத்கார முயற்சி; புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு பதியவில்லை?: உ.பி போலீஸ் எஸ்பிக்கு ஐகோர்ட் கண்டனம்

அலகாபாத்: துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்த முயற்சி தொடர்பான வழக்கை, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு பதியவில்லை? என்று உ.பி போலீஸ் எஸ்பிக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது, கடந்த ஜூன் 28 அன்று தீபு என்பவனும், அவனது கூட்டாளிகளும் வந்தனர். அவர்கள் கைத்துப்பாக்கியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கூச்சலிட்டதும் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமும், இதே குற்றவாளிகள் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, தொடர்ந்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக ஐபிசியின் பிரிவுகள் 376 (2) (என்), 354, 147, 452, 504 மற்றும் 506 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் கடந்த 3ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘கடந்த ஜூலை 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. அந்த சட்டத்தின்படிதான் வழக்குகள் பதிய வேண்டும். ஆனால் ஜூலை 3ம் தேதி பழைய நடைமுறையில் இருந்த ஐபிசி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே இந்த எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் சிங் சங்வான், முகமது அசார் ஹுசைன் இத்ரிசி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஜூலை 3ம் தேதி ஐபிசி விதிகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஹமிர்பூர் போலீஸ் எஸ்பி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்