மாணவர்களை தாக்கியதற்காக வருந்துகிறேன் நடிகர் சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை: நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி

சென்னை: மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் நடிகர் சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை என நடிகை ரஞ்சனா நாச்சியார் கூறினார். குன்றத்தூர் அருகே அரசுப் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசிய வழக்கில் மாங்காடு போலீசாரால் பாஜ பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாங்காடு காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் அவர் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை மாங்காடு காவல் நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு நேரமும் கையெழுத்து போட நீதிமன்றம் உத்தரவிட்டதால் கையெழுத்து போட்டு வருகிறேன். எனது கைதுக்கு நடிகர் சங்கம் ஆதரவு குரல் கொடுக்கவில்லை. என்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள் யாரும் எனக்கு துணை நிற்கவில்லை. மாணவர்களை தாக்கியதற்காக தற்போது நான் வருத்தப்படுகிறேன்.

பிள்ளைகளின் பெற்றோருக்கு எனது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன். நான் பாஜ நிர்வாகி என்பதாலேயே கைதாகி உள்ளேன். சமூக வலைதளங்களில் நான் வெளியிட்ட வீடியோ குறித்து தற்போது அவதூறாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். குஷ்பூ, நான் ஒரு நடிகை என்பதை விட பாஜ கட்சி நிர்வாகி என்பதால் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். விரைவிலேயே தமிழகத்தில் மூடிய கதவுகளுடன் கூடிய பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்வதை பார்ப்பீர்கள். அதற்கு பாஜ நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்தான் காரணம் என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்

இதயம் காப்போம்: உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை

விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும் தமிழ்மொழியை அழிப்போம் என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்: வைகோ ஆவேசம்