மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அதிகாலை முதல் அருள் பாலித்து வந்தார். பின்னர் இரவு மேள தாளங்கள் முழங்க வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு உற்சவர் அங்காளம்மன் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாடியபோது எதிரே கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கையில் தேங்காய் தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் சிவாச் மற்றும் தமிழகம், வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு மேல்மலையனூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் மணி, அறங்காவலர் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட அறங்காவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

அரசு பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடல்

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன