குஜராத்தில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்: ரூ2.13 கோடியுடன் ஏடிஎம் வாகனம் கடத்தல்


காந்திதாம்: குஜராத் மாநிலத்தில் ரூ.2.13 கோடியுடன் ஏடிஎம் வாகனம் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் நகரில் உள்ள ஒரு பணமேலாண்மை நிறுவனம் அப்பகுதியிலுள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் ரூ.2.13 கோடியை அனுப்பி வைத்துள்ளது. அந்த வாகனத்தில் பணமேலாண்மை நிறுவனத்தின் காவலர் உள்பட 5 பணியாளர்கள் சென்றுள்ளனர். ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு 5 பேரும் தேநீர் பருக சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் போலி சாவியை பயன்படுத்தி ரூ.2.13 கோடி பணத்துடன் வாகனத்தை கடத்தி சென்றுள்ளார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த 5 பணியாளர்களில் ஒருவர் இருசக்கர வாகன ஓட்டியின் உதவியுடன் பணத்துடன் கடத்தப்பட்ட வாகனத்தை துரத்தி சென்றுள்ளார். மேலும் போலீசாரும் துரத்தினர்.

சினிமா பாணியில் தான் துரத்தப்படுவதை கண்ட கடத்தல்கார் அச்சமடைந்து பணத்துடன் வாகனத்தை ஊருக்கு வௌியே நிறுத்தி விட்டு, கூட்டாளி ஒருவரின் வாகனத்தில் தப்பி சென்று விட்டார். அங்கு விரைந்த காவல்துறை வாகனத்துடன் ரூ.2.13 கோடி பணத்தையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பணத்துடன் வாகனத்தை ஓட்டி சென்ற தினேஷ் பபால், ராகுல் சஞ்சோத், விவேக் சஞ்சோத், ராகுல் பரோட், நிதின் பானுஷாலி, கவுதம் வின்சோடா ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விவேக் சஞ்சோத், நிதின் பானுஷாலி ஆகியோர் ஏற்கனவே அந்த பணமேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது தெரிய வந்தது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு