ஆத்தூர் அருகே உலர் பழக்கடையில் பயங்கர தீ: பல லட்சம் பொருட்கள் நாசம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே உலர் பழக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் நாசமாகின. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் அரங்கபாலா நகர் பகுதியில் உலர் பழக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ரவிச்சந்திரன் (50). இவர் கடையின் சாவியை வேலைப்பார்க்கும் ஊழியர்களிடம் கொடுத்து விட்டு 2 நாட்கள் வெளியூரில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

நேற்றிரவு கடையில் வேலைப்பார்த்த ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் பூட்டி சென்றனர். இந்நிலையில் இன்று காலை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கும், கடையின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையில் கொளுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து 1 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.

இதில் கடையில் இருந்த மின்சாதன பொருட்கள், கம்ப்யூட்டர்கள், உலர் பழங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடையை மூடும்போது மின்இணைப்பு சாதனங்களை முறையாக அணைக்காததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்