வீடுகளில் மின் பயன்பாட்டை அளவிடுவதற்கான ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதல் டெண்டர் செல்லும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் பயனாளிகளின் வீடுகளில் பொருத்துவதற்காக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) டெண்டர் கோரியது டெண்டர் ஆவணங்களில், தொழில்நுட்ப டெண்டர் மற்றும் நிதி டெண்டர் ஆகிய இரண்டையும் திறந்து ஒப்பந்ததாரரை இறுதி செய்த பிறகு அதைவிட குறைந்த தொகையில் டெண்டர் கோரும் வகையில் எதிர் ஏலம் நடைமுறை பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர் ஏலம் நடைமுறை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி ஐதராபாத்தைச் சேர்ந்த எஃபிகா என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மின் மீட்டர்கள் கொள்முதல் தொடர்பான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து டான்ஜெட்கோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. டான்ஜெட்கோ தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த டெண்டர் அறிவிப்பு நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதல்ல. ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் நீதித்துறைக்கு ஒரு எல்லை உண்டு. டெண்டர் திறக்கப்பட்ட பிறகு டெண்டர் தொகையில் மாற்றமோ செய்ய முடியாது என்று டெண்டர் விதிகள் 2000ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதிர் ஏலத்திற்கு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் எந்த விதத்திலும் தடைவிதிக்கவில்லை.
எனவே, இதில் எந்த விதி மீறலும் இல்லை. இதன் அடிப்படையில் டான்ஜெட்கோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஏற்கப்படுகிறது. டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Related posts

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்

கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது