மாமல்லபுரம் அருகே கடம்பாடியில் 46 ஏக்கரில் விளையாட்டு திடலா?: புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

சென்னை: மாமல்லபுரம் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்காக புன்செய் மற்றும் நன்செய் தரிசு நிலத்தினை தலைமை செயலாளராக பதவியேற்க உள்ள சிவ்தாஸ் மீனா பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் கடம்பாடி ஊராட்சி உள்ளது. இங்கு, கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உப்பளத்துக்கு அருகே 46 ஏக்கர் புன்செய் மற்றும் நன்செய் நிலங்கள் உள்ளன. இந்த, நிலங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளதாலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதாலும் விளையாட்டு திடல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடனும், பல்வேறு அம்சங்களுடனும் மிகப் பிரமாண்டமாக தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக பதவியேற்க உள்ள சிவ்தாஸ் மீனா நேற்று மதியம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து கடம்பாடியில் 46 ஏக்கர் பரப்பளவில் உள்ள நன்செய் மற்றும் புன்செய் நிலத்தில் விளையாட்டு திடல் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என வரைபடத்தை வைத்து திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் மண்ணின் உறுதித் தன்மை, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் குமரகுருபரன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு