அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் துரத்திய மரணம் தெலங்கானா பெண் எம்எல்ஏ கார் விபத்தில் பலி

திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா(37). இவர் நேற்று அதிகாலை படான் செருவு அருகே உள்ள ஓ.ஆர்.ஆர். (புறநகர் சுற்றுச்சாலை) பகுதி வழியாக காரில் சென்றார். காரை ஓட்டுநர் ஓட்டி சென்றார். இவரது கார், நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியதில் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், எம்எல்ஏ லாஸ்தா நந்திதா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, மறைந்த எம்எல்ஏ சயன்னாவின் மகள் ஆவார். பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். எம்.எல்.ஏ சயன்னா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி கார் விபத்தில் இறந்தார். தந்தை இறந்ததால் பி.ஆர்.எஸ் கட்சி லாஸ்யாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதில், மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். லாஸ்யா எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லாஸ்யா நந்திதா லிப்டில் சிக்கிக் கொண்டார். லிப்ட் திடீரென தரை தளத்தில் விழுந்தது.

கடந்த 13ம் தேதி நல்கொண்டாவில் நடைபெற்ற பிஆர்எஸ் கூட்டத்துக்கு சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. அப்போது அவரது பாதுகாப்பிற்கு வந்த ஊர்காவல் படை வீரர் இறந்தார். இந்த விபத்தில் லாஸ்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். நல்கொண்டா விபத்து நடந்த பத்து நாளில், மரணம் மீண்டும் துரத்தியது. ஆனால் இம்முறை மரணத்தின் பிடியிலிருந்து லாஸ்யா வால் தப்ப முடியவில்லை. ஐதராபாத் வெளிவட்ட சாலையில் நடந்த கார் விபத்தில் லாஸ்யா உயிரிழந்தார்

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு