ஆர்வமிருந்தால் ஜோதிடத்திலும் பெண்கள் சாதிக்கலாம்!

என்னதான் பல துறைகளிலும் பெண்கள் , ஆண்களைக் காட்டிலும் முன்னேறிவந்தாலும் இன்னும் சில துறைகள் பெண்களுக்கு எட்டாக் கனியாகவோ அல்லது பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டாத துறையாகவோ உள்ளன. அதில் ஒன்று ஜோதிடம். ஆனால் அதை தனது துறையாக தேர்வு செய்து பிரபலமாகவும் இருக்கிறார் ஜோதிடர் சத்யா.

 நீங்க ஜோதிடரானது ஆனது பற்றி?

நான் 12 வயதிலேயே ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், அப்போது எனக்கு அதன் மீது பெரிதாக ஆர்வம் இல்லை. திருமணத்திற்கு பிறகு வேறு எந்த படிப்பும் படிக்க இயலாததால் மீண்டும் ஜோதிடத்தை கையில் எடுத்தேன். சிறு வயதில் எனது வீட்டில் கற்றுக் கொண்டதற்கும், வெளியில் கற்றுக் கொள்வதற்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தன. அதேபோல நிறைய தவறுகளும் இருந்தன. ஏன் இந்த முரண்பாடுகளும் தவறுகளும் என்றுயோசித்ததின் விளைவுதான் சத்யாவாக இருந்த நான் ஜோதிடர் சத்யாவாக உருவானது.

கோட்டுமொழியின் அர்த்தம் மற்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம்?

கோட்டு மொழி, இந்த வார்த்தை எல்லோருக்கும் தனித்துவமாக தெரியும். கோட்டு மொழி என்றால் யந்திரம் தான் இதனுடையை அர்த்தம். என்னுடைய பார்வையில் மனமே யந்திரம் எண்ணங்களே மந்திரம். மேலும் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. இன்று நான் வாழும் வாழ்க்கை ஐயா அவர்களுடைய எண்ண ஓட்டத்தில் அமைந்ததுதான். அவருடைய ஒரு நாவலில் கோட்டு மொழி என்ற வார்த்தை இருக்கும். அந்த தூண்டுதலில் தான் நான் இந்த வார்த்தையை எடுத்துக்கொண்டேன். இதற்கு என்ன முக்கியத்துவம் என்று பார்த்தால் மனம் அது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று கூறுவார்கள். மனம் திடமாக, தெளிவாக, நிதானமாக இருக்கின்ற ஒருவரை யாராலும் அசைக்க முடியாது. இந்த திடமும் தெளிவும் எண்ணங்களால் உருவாக்கப் படுகிறது. எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக விதைக்கப்பட வேண்டும். ஆகையால் தான் கோட்டு மொழி என்ற வார்த்தையை என்னுடைய ஜோதிட முறைக்கு வைத்திருக்கிறேன்.

 பாரம்பரிய/பிற ஜோதிடத்திற்கும் கோட்டுமொழி ஜோதிடத்திற்கும் உள்ள வேறுபாடு?

பாரம்பரிய ஜோதிடம் என்பது ஆல மரம் மாதிரி, மற்ற முறைகள் எல்லாமே அதன் கிளைகள்தான். நம்முடைய ஜோதிடமும் அதுபோல பாரம்பரியத்தில் இருந்து எடுத்ததுதான். புதியதாக இங்கு யாரும் எதுவும் கொண்டு வர முடியாது. பாரம்பரிய ஜோதிட முறையை உளவியலாக மாற்றி எளிமைப்படுத்தி இருப்பதுதான் கோட்டு மொழி ஜோதிட முறை. மேலும், கணக்குகள் இல்லாமல் நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களை வைத்தே ஜோதிடம் கணிக்கும்அருமையான முறைதான் கோட்டு மொழி ஜோதிடம்.

 பெண்கள் குறைவாக இருக்கும் ஜோதிடத் துறையில் ஊக்கம் கொடுத்தது யார்?

நான் இந்த ஜோதிட துறையில் இவ் வளவு தூரம் பயணப்பட முக்கியமான பக்கபலமாக இருந்தது எனது பெற்றோர்கள்தான். ஜோதிடத்தை எனக்கு முதன் முதலில் கற்றுக் கொடுத்தது எனது அப்பாதான். என்னுடைய முதல் குரு என்னுடைய பெற்றோர்கள். அதன் பிறகு ஜோதிடத்தில் நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு நிறைய பேரிடம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கெல்லாம் என்னுடன் இருந்து பெரிய விஷயங்களில் அனுசரித்து அதிகமாக உழைத்தது என்னுடைய கணவர்தான். இன்றும் நான் ஜோதிடத்தில் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன். அதற்குக் காரணம் குடும்பத்தாரின் உறுதுணை இருப்பதால்தான். என் கணவரும் மகளும்தான் எனக்கு பக்க பலமாக இருந்து என்னை ஊக்குவிப்பவர்கள்.

 நீங்கள் எந்தெந்த முறையில் ஜோதிட பலன்கள் கூறி வருகிறீர்கள்?

ஜாதகக் கட்டம் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள பொருட்கள், இடங்கள் நிறங்கள், எண்கள், எழுத்துகள், சப்தங்கள், நேரம் இப்படி எல்லா விஷயங்களுக்குள்ளும் கிரகங்களின் தாக்கம் இருக்கிறது. ஆகையால், இது அனைத்தையும் வைத்தே பலன் சொல்கிறேன்.

 கைப்பேசி எண்களை வைத்து கிரக ரீதியாக பலன்கள் சொல்வது எப்படி?

இந்த உலகத்தில் அசையும் மற்றும் அசையாத அனைத்துப்பொருட்களிலுமே கிரகங்களின் தாக்கம் உண்டு. நம் பெரியவர்கள் கூறியது போல இன்னும் எழுத்தும் கண்ணென தகும் என்று கூறியது போல இன்று எண்களும் எழுத்துகளும் நமது வாழ்வியல் முறை அனைத்திலும் இருக்கிறது. அதில் கைபேசி என்பது நமது ஆறாம் விரலாகவே இருக்கிறது. நம்முடைய பெயர் எப்படி நமக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே கைப்பேசி எண்களும் நமது அடையாளமாக இருக்கிறது. ஒரு நபர் கைபேசி எண்ணை என்றைக்கு உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறாரோ அன்று முதல் எத்தனை காலங்கள் வரை அவர் பயன்படுத்தி வருகிறாரோ அதுவரை அந்த எண்கள் கிரகங்களாகவும் பாவகங்களாகவும் இயங்கிக்கொண்டிருக்கும். ஒரு ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் எப்படி இருக்கிறதோ, அந்த பலன்களை நம்மைச் சுற்றி இருக்கும் எண்களும் கொடுக்கும் எனும் போது கைபேசி எண்ணும் கொடுக்கும். இதை வைத்து பலன் கூறும்போது எளிமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

 நீங்கள் செய்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி?

நான் இப்போது ஜோதிடத்தில் இசையை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். இசைக்கு மயங்காத வர்கள் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கிரகங்களின் தாக்கம் இருக்கும் போது இசையிலும் கண்டிப்பாக இருக்கும். ஆகவே இசையை ஜோதிடத்தில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும், இதன்மூலமாக பரிகாரங்கள் கொடுக்க முடியுமா? இசையின் மூலம் நிறைவான வாழ்க்கையை கொடுக்க முடியுமா என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோம். மேலும், நிறங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நிறங்களுக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சில நிறங்களைப் பார்க்கும்போது பாந்தமாக அமைதி யாக உற்சாகம் வருகிறது. சில நிறங்களை தொடர்ந்து பார்க்கும்போது மனதில் ஒரு இறுக்கம் வருகிறது. எந்த நிறங்கள் யாருடைய மனதிற்கு இதமாக உற் சாகம் தருவதாக, தன்னம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை கலர் தெரபி அஸ்ட்ராலஜி மூலம் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

 ஜோதிடத் துறையில் உங்கள் லட்சியம்?

நம் பிரச்னைக்கு நாம் ஏன் அடுத்தவரிடம் விடையை தேடிப் போக வேண்டும்? நமக்கு நாமே ஏன் ஒரு விடையைத் தேடிக் கொள்ள முடியாது? நமது பிரச்சனைகளுக்கு நம்மிடமே விடை இருக்கலாமல்லவா? அதற்கு இந்த ஜோதிடம் சரியான வழிகாட்டி. ஆகையால் இந்த ஜோதிடத்தை தற்சார்பாக அவரவர்கள் அவரவர்களுக்கே பார்த்துக் கொள்கின்ற முறையில் இந்த சமுதாயத்திற்கு எப்படி கொண்டுபோவது? எல்லோரும் ஜோதிடம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, எல்லோருக்கும் ஜோதிடத்தை கொண்டுபோய் சேர்ப்பது தான் என்னுடைய லட்சியம்.

ஜோதிடத் துறையில் இதுவரை உங்கள் சாதனை என்ன?

யாருக்கெல்லாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வேகமும் இருக்கின்றதோ? அவர்களுக்கு எளிமையான முறையில் கணக்குகளே இல்லாமல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சுமார் 500 பேருக்கும் மேலாக அடிப்படை ஜோதிடம் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அடுத்ததாக உயர்நிலை ஜோதிட வகுப்பு சுமார் 300 பேருக்கும் மேலாக தற்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் எண் கணிதமும் கற்றுக் கொடுத்து வருகிறேன். அவர்கள் ஜோதிடமும் பார்க்கிறார்கள். தன்னுடைய வாழ்க்கையில் வரும் பிரச்னைகளையும், இருக்கும் பிரச்னைகளையும் அவர்களே சரி செய்து கொள்கிறார்கள். இதை நான் செய்யும் சாதனையாக கருதுகிறேன்.

ஜோதிடத்தை முழுமையாக கற்றுக்கொண்டுவிட்டீர்களா?

நான் இன்னும் ஜோதிடத்தை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால் ஜோதிடம் என்பது மகா சமுத்திரம். நவீனத்துவம் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் நிலையில் உயிர் உள்ளவரை ஜோதிடம் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த வகையில் நானும் எப்போதும் மாணவிதான்.

ஜோதிடருக்கான அடையாளம் எதுவும் இல்லாமல் இருப்பது ஏன்?

எனக்கு எளிமையாக இருப்பதுதான் பிடித்திருக்கிறது. எனக்கு அது சௌகரியமாகவும் இருக்கிறது. ஆகையால், ஜோதிடர் என்னும் அடையாளமான பட்டுப்புடவை, பெரிய திலகம், தலை நிறைய பூக்கள் என என்னால் பின்பற்ற முடியாததற்கு காரணம் இது இரண்டும்தான்.
– ஹேமலதா வாசுதேவன்

 

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு