உங்கள் ஜாதகத்திலிருந்து உங்கள் அத்தனை உறவுகளையும் தெரிந்து கொள்வது எப்படி?

நம்முடைய நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.‘‘அது எப்படி ஒரு ஜாதகத்தில் இருந்து மாமியார், மாமனார், மாமியாரின் சகோதரர், இவர்களைப் பற்றி எல்லாம் சொல்கிறீர்கள்?.’’ என்றார். நான் சொன்னேன்;‘‘மாமனார் மாமியார் மட்டும் அல்ல. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் பற்றிக்கூட உங்கள் ஜாதகத்தில் இருந்து சொல்லலாம். உங்கள் நண்பரின் ஜாதகத்தில் இருந்து உங்களைப் பற்றியும், உங்கள் ஜாதகத்தில் இருந்து உங்கள் நண்பரைப் பற்றியும் சொல்லலாம்.’’ அவர் வியப்போடு பார்த்தார். அப்பொழுது அவரிடம் ஜாதகத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றிச் சொன்னேன். ஜாதகங்கள் இரண்டு அடிப்படையில் இயங்குகின்றன. அதில் ஒன்று உயிர் காரகம். உயிர் காரகம் என்பது நம்முடன், இருக்கக்கூடிய மனித உறவுகளைக் குறிக்கிறது. அம்மா, அப்பா, மனைவி, நண்பன், சகோதரன், பிள்ளைகள், மாமா, தாத்தா, பாட்டி என இப்படிப்பட்ட உறவுகளை உயிர்காரகங்கள் என்று சொல்வார்கள்.

இரண்டாவதாக, பொருள் காரகம். தொழில், வருமானம், வீடு, வாகனம், படிப்பு, செல்வம் ஆகியவற்றை ஜட காரகம் அல்லது பொருள் காரகம் என்பார்கள். இது இல்லாமல் உடலின் அங்கங்களைக் குறிக்கக் கூடியதும் உண்டு. தலை, முகம், கண்கள், செவிகள், மார்பு, வயிறு, பால் உறுப்புக்கள், தொடை, முழங்கால், பாதம் என்று ஒவ்வொரு உறுப்பையும் ஒவ்வொரு பாகம் குறிப்பிடும். எந்த பாவமானது மிகவும் வலுவிழந்து, அதற்கான திசையும் நடக்கின்ற பொழுது, அந்த குறிப்பிட்ட உறுப்புகளில் பாதிப்புகள் (நோய்) ஏற்படும். உதாரணமாக 12ஆம் இடத்தில் சனி இருந்து, சனி திசை நடக்கின்ற பொழுது, அந்த சனி அசுபமாக இருந்தால், அல்லது அப்போது ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி நடந்து கொண்டிருந்தால் கட்டாயம் பாதத்தில் ஏதேனும் ஒரு நோய் வந்து படாத பாடு படுத்தும். அனுபவத்தைச் சொல்கிறேன். கும்ப லக்கினம். 12ம் இடம் மகரம். மீன ராசி. சிம்மத்தில் சனி இருந்தபோது, அஷ்டம சனி நடந்தது. சிம்மத்தில் பகை பெற்று, 7ம் பார்வையாக லக்கினத்தைப் பார்க்க, லக்னம் பாதித்தது. 12ம் இடத்துக்குரியவர் (பாதம்) பகை பெற்று அஷ்டம சனி நடத்தியதால், பாதத்தில் இனம் புரியாத வியாதி வந்து படாத பாடு படுத்தியது. ஐந்தாம் இடம் பலகீனமாக இருந்தால், மார்பில் நோய் வரும். அஷ்ட மஸ்தானம் பலகீனமாக இருந்தால், மர்ம உறுப்புகளில் ஏதேனும் நோய் நொடிகள் வந்து படாத பாடு படுத்தும்.

12 பாவங்களுக்கும் உள்ள காரகத்துவங்களை பாவ காரகத் துவங்கள் என்று சொல்வார்கள். அதைப் போலவேகிரகங்களுக்கும் இரண்டு காரகத்துவங்களும் உண்டு. உதாரணமாக, செவ்வாயை எடுத்துக் கொண்டால், அது சகோதர உறவுகளை குறிக்கும். அது செவ்வாயின் உயிர் காரகத்துவம். அதே செவ்வாய் பூமியையும் குறிக்கும். எனவே செவ்வாயின் ஜட காரகத் துவமாக பூமி வீடு அமையும். செவ்வாய் ரத்தத்தையும் குறிக்கும்.இப்போது ஒருவருடைய சகோதரரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக இளைய சகோதரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், பாவ காரகத் துவத்தில் மூன்றாம் இடமான சகோதர ஸ்தானத்தின் வலுவையும், கிரக காரத்துவமான செவ்வாயின் வலுவையும், இணைத்துத்தான் அவருடைய சகோதர அமைப்பினை நம்மால் கணிக்க முடியும். மூத்த சகோதரருக்கு செவ்வாயையும், 11ம் இடத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதே 11ம் இடத்தை சுக்கிரனோடு இணைத்து பார்த்தால், இரண்டாவது திருமணம் குறித்து அறிய முடியும்.

ஒரு ஜாதகத்தில் இருந்து நண்பரைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டால், நட்பைக் குறிக்கக்கூடிய பாவமாகிய ஏழாம் பாவத்தின் வலிமையைக் கொண்டு, நண்பரைப் பற்றிச் சொல்லி விடலாம். இவர்களுக்கு நண்பர்கள் எப்படி இருப்பார்கள்? ஆதரவாக இருப்பாரா? மாட்டாரா? என்பதைப் பற்றி எல்லாம் ஓரளவு கணிக்க முடியும். கிரக உயிர் காரகத்துவங்களில் சூரியன் தந்தையையும், செவ்வாய் சகோதரனையும், சந்திரன் தாயையும், புதன் நண்பர்களையும், தாயோடு சேர்ந்த உறவுகளான மாமன்மார்களையும், சுக்கிரன் கணவன் அல்லது மனைவியையும், குரு ஆசிரியர்களையும் குறிக்கும். ராகு தந்தை வழி முன்னோர்களையும், கேது தாய் வழி முன்னோர்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள் சனி பொதுவாக வேலைக்காரர்களைக் குறிக்கும். அதைப் போலவே, 12 பாவங்களிலும் நம்முடைய அத்தனை உறவுகளும் இருக்கின்றன.

ஒன்றாம் பாகம் நீங்கள். மூன்றாம் பாவம் சகோதரன். அதுவும் இளைய சகோதரம். நான்காம் பாவம் தாய், மாமனார் (மனைவி அல்லது கணவரின் அப்பா), ஐந்தாம் பாவம் பூர்வீகம் மனைவியின் மூத்த சகோதரர், ஆறாம் பாவம் தாயின் இளைய சகோதரம். (இதை நான்காம் இடத்திற்கு மூன்றாம் இடம் என்ற கணக்கில் பார்க்க வேண்டும்.) மாமனாரின் இளைய சகோதரம். ஏழாம் இடம் நண்பன் மனைவி அல்லது கணவனைக் குறிக்கும். எட்டாம் இடம் மாமியாரின் மூத்த சகோதரர்களைக் குறிக்கும். ஒன்பதாமிடம் மனைவியின் இளைய சகோதரர்களைக் (சகோதரிகளை) குறிக்கும். பத்தாம் இடம் மாமியார் அதாவது மனைவியின் அம்மாவைக் குறிக்கும். 11ஆம் இடம் மூத்த சகோதரன் மற்றும் இரண்டாவது தாரத்தைக் குறிக்கும் 12ஆம் இடம் மாமாவின் மனைவி அல்லது தாயின் அம்மா (தாத்தா) இவர்களைக் குறிக்கும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்று சொன்னால், லக்னத்தோடு பொருத்திப் பார்த்துதான் நேரடி உறவை எடுக்க வேண்டும்.

உதாரணமாக, அம்மா நான்காம் பாவம். அப்பா ஒன்பதாம் பாவம். இது நேரடியாக எடுக்க வேண்டிய முறை. ஒருவர் கேட்டார்; அம்மாவின்கணவர் தானே அப்பா! அம்மா நாலாம் பாவம் என்றால் அந்த நாலாம் பாவத்துக்கு ஏழாம் பாவம் பத்தாம் பாவகம் தானே வரும்’’ என்று கேட்டார். நான் அவருக்குப் பதில் சொன்னேன்.‘‘லக்னத்திற்கு நேரடி அம்மா நான்காம் பாவம். லக்னத்திற்கு நேரடி அப்பா ஒன்பதாம் பாவம். அம்மாவுக்கு வேறு கணவர் இருந்தால், அப்பொழுது வேண்டுமானாலும் பத்தாம் பாவத்தை எடுக்கலாமே தவிர, நேரடியாக எடுக்க முடியாது. அது பல சிக்கல்களைத் தரும். ஆனால், அம்மாவின் சகோதரர்களை ஆறாம் பாவத்திலிருந்து எடுக்கலாம். காரணம், அந்த அம்மாவின் மூலமாகத்தான் அந்த சகோதர உறவு வருகிறது. நாலாம் பாவத்திற்கு மூன்றாம் பாவம், ஆறாம் பாவம் அம்மாவின்கூட பிறந்த சகோதரர்களை அதாவது மாமன்மார்களைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்’’ என்று விளக்கினேன்.

காரணம், ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவை எடுக்கின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையோடு எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது பல சிக்கல்களைத் தரும். இன்னொரு விஷயம். (முக்கியமான விஷயம்).உதாரணமாக, உங்கள் ஜாதகத்தில் இருந்து உங்கள் தாயின் ஆயுளை கணிக்க முடியும் என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும்கூட, அது சரி பார்க்கின்ற ஒரு கணக்கீடுகளாகத்தான் உபயோகப்படுத்த வேண்டுமே தவிர, அசல் ஆயுள் பாவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் தாயாரின் பிறந்த ஜாதகம் இருந்தால் தான் கண்டுபிடிக்க முடியும். அந்த ஆயுள் பாவமும் உங்கள் ஜாதகத்தின் தாயின் ஆயுள் பாவமும் ஓரளவு பொருந்தித்தான் வரும். அதாவது உங்கள் தாயின் ஜாதகத்தின் நேரடி மாரகம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுது, உங்கள் ஜாதகத்தின் நான்காம் பாவத்தின் மாரக பாவக தசையும் நடந்து கொண்டிருக்கும் என்பதை நீங்கள் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

தனுசு ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

சீர்காழி தாடாளன்

சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?