ஜோதிட ரகசியங்கள்

எப்படி கிரகங்களை ஆக்டிவேட் செய்ய முடியும்?

ஒரு முறை ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ‘‘கிரகங்களை ஆக்டிவேட் செய்வது டிஆக்டிவேட் செய்வது என்றெல்லாம் சொல்கிறார்களே, இது வேடிக்கையாக இருக்கிறது. அது எப்படி கிரகங்களை ஆக்டிவேட் செய்ய முடியும்? டிஆக்டிவேட் செய்ய முடியும்?’’ என்று கேட்டார்.

நான் சொன்னேன். ஜோதிடத்தின் அடிப்படையான ஒரு விஷயம், ஜாதகத்தில் என்ன அமைந்திருக்கிறதோ அது உங்கள் அதிர்ஷ்டத்தையும் பூர்வ புண்ணியத்தையும் பொருத்தது. அதே நேரத்தில் அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவைப் பொருத்தது.

இந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தான் உலக ஞானம், கல்வி, பெரியோர்களின் ஆசிர்வாதம், தெய்வ பக்தி பொதுவாகவே ஒரு பிரச்னையை நிதானமாக அணுகுவதன் மூலம், அந்த பிரச்னையை எப்படிச் சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். பல விஷயங்களை நாம் தேவையில்லாமல் பெரிதாக நினைத்துக் கொள்வதாலும், அவசரப்பட்டு முடித்துக் கொள்வதாலும் தான் சிக்கல் வருகின்றது.

12 கட்டங்களில் அமைந்த கிரக அமைப்பு என்பது உங்களுக்கு விழுந்த சீட்டுக்கள் ஆனால் அதை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். கிரகங்களுக்கு சில விதமான காரகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சுக்கிரனுக்கு பல்வேறு காரகங்கள் இருக்கின்றன. சுக்கிரன் இனிப்புக்கு உரிய கிரகம். சுக்கிரனுடைய ஆதிக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் இனிப்பை விரும்புவார்கள். செவ்வாயின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் அதிகமாக இருப்பவர்கள் பெரும்பாலும் சூடான பொருட்களையும் காரமான பொருட்களையும் விரும்புவார்கள்.

சனியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பவர்கள், சுவையற்ற பொருட்களையும் கெட்டுப் போன பொருட்களையும் பழைய பொருட்களையும் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் மூன்று நாள் குளிர்சாதன பெட்டியில் வைத்த பழைய சாம்பாரையும் காய்கறிகளையும் சாப்பிடுபவர்களுக்கு சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

ராகு கேது முதலிய கிரகங்கள் தூக்கலாக அதாவது ஆக்டிவேட்டாக இருக்கும் ஜாதகர்கள் பெரும்பாலும் போதை வஸ்துக்கள் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டிருக்கும். இதை தெரிந்து கொண்டு இதற்கு நேரடியான சில நடவடிக்கைகளை நாம் எடுப்பதன் மூலமாக அந்த கிரக காரகங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் அதாவது டிஆக்டிவேட் செய்யலாம். போதை மருந்துக்கு ஆட்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருவதற்கான நிலையங்களை பார்த்திருப்பீர்கள். (De Activation center) இந்த சூட்சுமத்தை நாம் ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொண்டு சில விஷயங்களை கையாளலாம்.

நமக்கு விதிக்கப்பட்ட மறைமுகமான சில பாதிப்புகளை தாங்கிக் கொண்டு நன்மையான பலன்களுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இதைத்தான் சாபங்களும் வரம் ஆகும் என்பார்கள். மகாபாரதக் கதையில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். அர்ஜுனனுக்கு ஒரு சாபம் வந்தது. “நீ ஆண் தன்மையை இழந்து ஆணும் பெண்ணுமற்ற தன்மையோடு இருப்பாய். அதுவும் ஒரு வருட காலம் இருப்பாய்” என்று ஒரு சாபம் அவனுக்கு இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, பஞ்ச பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியே போகும் நிலை ஏற்பட்டது. அதில் ஒரு வருட காலம் அவர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். அந்த ஒரு வருட காலத்தில் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டால் மறுபடியும் அவர்கள் காட்டிற்குப் போக வேண்டும் என்கின்ற நிபந்தனையோடு அவர்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

காட்டில் வாழ்க்கையை முடித்துவிட்டு மறைந்து வாழ வேண்டிய வாழ்க்கைக்கான வருடத்திற்கு வந்து விட்டார்கள். மற்றவர்கள் மறைந்து வாழ்ந்தாலும் கூட அர்ஜுனனுடைய ஆண்மைத்தன்மையும் ஆற்றலும் அவனை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் படியாகச் செய்துவிடும். அவன் எப்படி தன்னை மறைத்துக் கொள்வது என்று யோசித்த பொழுது அவனுக்கு விதிக்கப்பட்ட ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாமல் நபும்சகனாக இருக்கும் படியான சாபம் ஞாபகத்துக்கு வந்தது அந்த சாபத்தை இப்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டான். இப்பொழுது அவனுக்கு எப்போதோ விதிக்கப்பட்ட சாபமே வரம் ஆகியது.

குப்பை பொறுக்குகின்ற வாழ்க்கையைப் பெற்றவர்கள் ஐயோ இப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டோமே என்று குமுறாமல், குப்பை பொறுக்குகின்ற தொழிலையே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.  ‘‘நான் போய் குப்பை பொறுக்கும் தொழிலைச் செய்வதா?’’ என்று நினைக்கின்ற பொழுது அவர்களுக்கு உள்ள வாய்ப்பு போய்விடுகிறது. முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நல்ல ஜோசிய நண்பர் இருந்தார். அவரிடத்தில் சில நுட்பங்கள் நான் தெரிந்துகொண்டேன் அவரிடத்தில் ஒருவர் வந்து ஜாதகம் நீட்டினார் அப்பொழுது அவர் பல கணக்குகளைச் செய்து பார்த்து விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘உங்களுக்கு 12க்கு உரிய தசாபுத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் உள்ளூரில் இருப்பது நல்லதல்ல அப்படி உள்ளூரிலிருந்து தேவையில்லாத விவகாரங்களில் மாட்டிக்கொண்டு நீங்கள் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டி இருக்கும்.’’

உடனே அவர் கேட்டார்
‘‘இதற்கு என்ன மாற்று வழி?’’

அப்பொழுது ஜோசியர் சொன்னார்
‘‘இப்பொழுது ஆறு எட்டு திசைகள் நடப்பதால் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள்தான். பகைகள் நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதைப்போலவே நிறைய கடன் வாங்கி வைத்துக்கொண்டு திணறிக் கொண்டிருக்கிறீர்கள். பேசாமல் நீங்கள் இந்த ஊரில் இருந்து கொஞ்ச காலம் ஏதாவது தூர தேசத்திற்குச் சென்று வாழுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சிரமம் குறையும். அந்த நேரத்தில் புதிய தொழிலை அங்கு கற்றுக் கொள்ளுங்கள். நன்கு உழையுங்கள். காரணம் எட்டாவது ராசி என்பது கடுமையான உழைப்பைத் தருவது (அது அதனுடைய பாசிட்டிவ் பாயிண்ட் என்று சொல்லலாம்) அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதிர்காலம் நல்லவிதமாக இருக்கும். இல்லாவிட்டால் நீங்கள் இங்கேயே கிடந்து, தேவையில்லாத அடிதடி முதலிய விவகாரங்களில் இறங்கி, போலீஸ் கோர்ட் கேஸ், ஏன் கொலையில் கூட முடியும்’’ என்று அவர் சொன்னது எனக்கு வியப்பை அளித்தது.

ஆனால் அந்த நண்பர் அப்படியே செய்தார். அவர் கொஞ்ச காலம் மும்பையில் தங்கி ஏதோ சின்ன சின்ன தொழிலைச் செய்து பிறகு அங்கேயே ஒரு இட்லி கடையைத் திறந்து காலை முதல் சாயங்காலம் வரை கடுமையாக உழைத்து முன்னேறினார். இப்பொழுது அவர் அங்கேயே ஒரு நல்ல கட்டிடத்தில் கடையை கட்டிவிட்டார் வியாபாரத்தை விரிவுபடுத்திவிட்டார். மகன்களை நன்கு படிக்க வைத்து விட்டார்.

பாதகம் செய்யக்கூடிய 8, 12 பலாபலன்களை (அதாவது வீட்டை விட்டு வெளியேறுவது, இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது, கடன்கள் அதிகரிப்பது, பகையை வளர்த்துக்கொள்வது) போன்ற பலன்களை எல்லாம் டிஆக்டிவேட் செய்துவிட்டு, கடுமையான உழைப்பு, வெளியூரில் சென்று வாழுதல் போன்ற பாசிட்டிவ் விஷயங்களை ஆக்டிவேட் செய்து இன்றைக்கு நன்றாக இருக்கின்றார்.

இதில் எது தேர்ந்தெடுப்பது என்பதற்காகத்தான், நமக்கு மதி என்ற புத்தியை கொடுத்து அனுப்பி இருக்கின்றான். அது என்னவோ தெரியவில்லை. மதி என்னும் விளக்கை பலரும் அணைத்துவிட்டு இருட்டில் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கண்பார்வை சரியாக இல்லாத பொழுது இருட்டில் தேடுவதால் ஆபத்து தானே அதிகம்.

Related posts

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

தேரழுந்தூர் தேவாதிராஜன்

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!