உதவியாளர் பணிக்கு தேர்வான 523 பேருக்கும், 946 மருந்தாளுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 1947 உதவி மருத்துவர்கள், 1291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 628 இளநிலை உதவியாளர், 158 தட்டச்சர், 220 சுருக்கெழுத்து-தட்டச்சர், 12 சுகாதார அலுவலர், 30 கணிணி இயக்குபவர் மற்றும் தடுப்பூசி பண்டக காப்பாளர், 5 கணினி இயக்குபவர், 1 புள்ளி விவர தொகுப்பாளர், 1 மக்கள் திரள் பேட்டியாளர் என்று மொத்தம் 4293 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

946 மருந்தாளுநர்கள் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலகின் கீழ் செயல்படும் இயக்ககங்களில் காலியாகவுள்ள 946 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேவைப் பட்டியல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு அரசின் அறிவுறுத்தலின்படி உரிய கலந்தாய்வு 13.08.2024 அன்று நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வின் மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து அதன்மூலம் 946 மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

523 உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-19 முதல் 2022-23 வரையிலான காலத்திற்கான காலி பணியிட மதிப்பீட்டு அறிவிப்பின்படி தெரிவு செய்யப்பட்ட 523 உதவியாளர் பணியிடத்திற்கு 17.08.2024 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து பணிநியமனம் செய்யப்பட்ட 523 உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் (Vocational Counsellor) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்

கல்வி, வாழ்க்கைத் தொழில், தனியர் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதல்களையும் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் உள்ள தொழில் வழிகாட்டி ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல், வழிகாட்டப்பட வேண்டியவர்களின் நுண்ணறிவு, உளச்சார்பு, ஈடுபாடு மற்றும் ஆளுமை குணங்கள் ஆகியவற்றினை கணிக்கும் உளவியல் தேர்வினை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்களுக்கு (Vocational Counsellor) பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் ஒரு ஆலோசகருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆலோசகர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு புனர்வாழ்வு மற்றும் மருத்துவ நிலையத்தில் பணிபுரிவர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, குடும்ப நல இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி

கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!