பேரவையில் குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டனர் அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றினர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டவுடன் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். டிசம்பர் 2001ல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடந்து 52 பேர் மரணமுற்று 200க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர். பாமக தலைவர் ஜி.கே.மணி, தி.வேல்முருகன் ஆகியோர் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002ம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாக பதில் வழங்குகிறேன். அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என்று பயந்துதான் இவர்கள் இன்றைக்கு திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், கலைஞரும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். தாங்களும் (சபாநாயகர் அப்பாவு) பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவரும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என்று பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.

பேரவை விதி 120ன் கீழ் பேரவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும், என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமைகிறேன் என்றார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசலாம் என்று அழைக்கிறேன் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு