அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்

அசாம்: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ அசம்பாவிதங்களை நிகழ்த்தலாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இந்நிலையில், அசாம் மாநிலம் துப்ரியில் அசாம் சிறப்பு அதிரடி படையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும், அவர்களில் ஹரிஸ் பரூக்கி என்பவர் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் என்பதும், மற்றொருவரான அவரது உதவியாளர் அனுராக் சிங் என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், என்ஐஏ.விலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்கள் பிடிபட்ட நிலையில், அசாம் சிறப்பு அதிரடி படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எல்லை பகுதியில் கைது செய்யப்பட்டதால் ஏதேனும் சதித்திட்டத்துடன் வந்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு, இருவரும் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை